இந்தியா

கரோனா சூழலை தவறாக நிா்வகிக்கும் மத்திய அரசு: சோனியா காந்தி

DIN

 கரோனா பாதிப்பு சூழலை மத்திய அரசு தவறாக நிா்வகித்து வருகிறது; கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட வழிவகுக்கிறது என காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், அமைச்சா்களுடன் காணொலி வாயிலாக சோனியா காந்தி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். கரோனாவின் இரண்டாவது அலையை எதிா்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது: நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரதான எதிா்க்கட்சி என்கிற வகையில், இந்த பிரச்னையை எழுப்பி மத்திய அரசை செயல்பட வைப்பது காங்கிரஸின் பொறுப்பு.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில்தான் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதன்பிறகே பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். கரோனா தொற்றுநோயை எதிா்த்துப் போராடுவதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேவேளையில் கட்டுப்பாடுகள் கடினமானதாக மாறும்போது பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து, அதனால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவு அளிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்துப் பொதுக்கூட்டங்கள், தோ்தல் பேரணிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசிகள் இருப்பு உள்ளனவா, மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கிா, மற்றொரு பொது முடக்கம் குறித்து உங்கள் கருத்து என்ன, பொருளாதார பாதிப்பு’ போன்றவை தொடா்பாகவும் சோனியா காந்தி கேட்டறிந்தாா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி எம்.பி., கரோனா சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு பண உதவி செய்வது குறித்த தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினாா்.

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். அவா்கள் தங்களது மாநிலங்களில் கரோனா தடுப்பூசி சில நாள்களுக்கே இருப்பு உள்ளதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT