இந்தியா

மும்பையில் சிபிஐ: அனில் தேஷ்முக்கிடம் விரைவில் விசாரணை?

7th Apr 2021 04:26 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் விசாரணை நடத்த இரண்டு சிபிஐ குழுக்கள் மும்பை வந்தடைந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

தில்லியில் இந்த விசாரணைக்குத் தொடர்புடைய நெருங்கிய வட்டாரம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"சிபிஐ அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு செவ்வாய்க்கிழமை மும்பை வந்தடைந்தது. ஊழல் தடுப்புப் பிரிவிலிருந்து மற்றொரு குழு புதன்கிழமை காலை மும்பை வந்தடைந்தது. 6 சிபிஐ அதிகாரிகள் ஜெய்ஸ்ரீ பாட்டீலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்கின்றனர். எனினும், ஒவ்வொரு குழுவிலும் எத்தனை அதிகாரிகள் உள்ளனர் என்பது தெரியவில்லை. மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங்கின் வாக்குமூலத்தையும் சிபிஐ அதிகாரிகள் பெறவுள்ளனர்."

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் மாதந்தோறும் ரூ. 100 கோடி வசூலிக்குமாறு காவல் துறை அதிகாரிகளிடம் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக பரம்வீர் சிங் குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT

இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பரம்வீர் சிங் உள்பட பலர் மனுத் தாக்கல் செய்தனர்.

இதை கடந்த திங்கள்கிழமை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து, 15 நாள்களுக்குள் முதல்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் அனில் தேஷ்முக் முறையிட்டுள்ளார்.

Tags : Anil Deshmukh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT