இந்தியா

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் தாக்குதலில்: காணாமல்போன வீரரைத் தேடும் பணி தீவிரம்

7th Apr 2021 04:40 AM

ADVERTISEMENT

சத்தீஸ்கரில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ராணுவத்துக்கும் நக்ஸல்களுக்கும் இடையே பாஸ்டர் சரகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் காணாமல்போன ராணுவ வீரரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
 வீரரை பற்றிய தகவலைச் சேகரிக்கும் பணியில் காவல் துறையினருக்கு தகவல் அளிப்பவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 சிஆர்பிஎஃப் படையில் உயரடுக்கு பிரிவான கோப்ரா படையின் 210 ஆவது பட்டாலியன் பிரிவில் (கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரிசோலிட் ஆக்ஷன்) காவலராகப் பணிபுரிபவர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ். இவர், மாநிலத்தில் சுக்மா- பிஜாபூர் மாவட்ட எல்லையில் ராணுவத்துக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது காணாமல்போனார்.
 இதுதொடர்பாக பிடிஐக்கு பஸ்தர் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறியதாவது:
 தற்போது வரையில் காணாமல்போன வீரர் நக்ஸல்களின் பிடியில் இருக்கிறார் என்பதை நாங்கள் உறுதி செய்ய இயலாது. இதுதொடர்பாக அவர்களிடம் இருந்து எந்தவித புகைப்பட ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை. இதனால் அனைத்து வழிகளிலும் வீரரைத் தேடும் பணியில் நாங்கள் முயன்று வருகிறோம். காணாமல்போன வீரரைப் பற்றிய தகவல் ஏதும் உள்ளூர் மக்களுக்கு தெரிந்திருக்குமா என்ற வகையில் அவர்களிடமும் தொடர்பில் உள்ளோம் என்றார்.
 மற்றொரு மூத்த காவல் துறை அதிகாரி கூறியதாவது:
 நக்ஸல்கள் அந்த வீரரை சிறைப்பிடித்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் வலுவாக உள்ளன. ஏனெனில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த பகுதி முழுவதும் படை வீரர்களால் கடந்த இரு நாள்களில் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அந்த வீரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
 காணாமல்போன வீரர், பிஜாப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் வனப்பகுதியில் நக்ஸல்கள் எதிர்ப்புப் படையில் ஒரு அணியின் வீரராக வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்தார். சனிக்கிழமைதான் தேகல்கூடா-ஜோனகூடா கிராமங்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். பலியான 22 பேரில் கோப்ரா கமாண்டோ வீரர்கள் 7 பேர், பாஸ்டரியா பட்டாலியன் ராணுவ வீரர் ஒருவர், மாவட்ட வனக் காவலர்கள் 8 பேர், சிறப்பு அதிரடிப் படையினர் 6 பேர் அடங்குவர். இதற்கிடையே சம்பவம் நிகழ்ந்த ஜெகதால்பூருக்கும் பிஜாபூருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார். அப்போது நக்ஸல்களுக்கு எதிரான மோதலை அரசு தீவிரப்படுத்தும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT