இந்தியா

இந்திய, ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வருடாந்திர மாநாடு குறித்து ஆலோசனை

7th Apr 2021 04:41 AM

ADVERTISEMENT

இந்தியா வந்துள்ள ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர உச்சிமாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர்.
 இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:
 அணுசக்தி, விண்வெளி, ராணுவம் ஆகிய துறைகளில் இந்தியா, ரஷியா இடையேயான நீண்ட கால ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தோம். பிராந்திய விவகாரங்கள் குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்.
 ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும். அதற்கு அசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் ரஷிய அமைச்சரிடம் தெரிவித்தேன். இந்திய-பசிபிக் விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவரிடம் தெரிவித்தேன். தற்காலத்திய சவால்களுக்கு நாடுகள் ஒன்றிணைந்து புதிய வழிகளில், மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து தீர்வுகாண வேண்டும் என்றார் எஸ்.ஜெய்சங்கர்.
 ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் கூறியதாவது:
 ரஷியா-சீனா இடையே ராணுவ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட இருப்பதாக வெளியாகும் ஊகங்கள் தவறானவை. இதுகுறித்து இந்தியாவிடம் ரஷியாவின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். தனிப்பட்ட முறையில் எந்தவொரு நாட்டுக்கும் எதிராக அணி திரள்வதில் ரஷியாவுக்கு விருப்பமில்லை என்பதை பகிர்ந்துகொண்டேன். இந்தியா- ரஷியா இடையே ராணுவ ஒத்துழைப்பு, ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி ஆகிய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தோம் என்றார்.
 ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா-ரஷியா உச்சிமாநாடு கரோனா தொற்று காரணாக, கடந்த ஆண்டு நடைபெறவில்லை.
 ரஷியாவில் இந்திய தடுப்பூசி தயாரிப்பு: கரோனா நீநுண்மி பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் தயாரிப்பதில் இந்தியாவுடன் ரஷியா இணக்கமாக ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.
 ரஷியாவின் "ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு இந்திய நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அந்த ஒப்பந்தப்படி சுமார் 70 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதேபோன்று, இந்திய தடுப்பூசிகளை ரஷியாவில் தயாரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்றார் செர்கேய் லாவ்ரோவ்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT