இந்தியா

முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளுநரிடம் அமைச்சர் புகார் கடிதம்

1st Apr 2021 04:20 AM

ADVERTISEMENT

 


பெங்களூரு: முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளுநரிடம் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா புகார் கடிதம் எழுதியுள்ளார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆளுநர் வஜுபாய்வாலாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது துறையில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டிருப்பதன் மூலம் கர்நாடக (செயல் பரிமாற்றம்) சட்ட விதிகள், 1977 மீறப்பட்டுள்ளது. மேலும் இது மாநில அரசு நிர்வாகத்தின் நடைமுறைகளுக்கு எதிராக உள்ளது.
முதல்வருக்கு, பெங்களூரு நகர மாவட்ட ஊராட்சித் தலைவர் எழுதியுள்ள நேரடி கடிதத்தின் அடிப்படையில், ரூ. 65 கோடியை நேரடியாக முதல்வர் ஒதுக்கியுள்ளார். என்னுடைய கவனத்திற்கு வராமல் முதன்மைச் செயலாளர் மூலமாக உத்தரவு பிறப்பிக்க முதல்வர் அழுத்தம் கொடுத்துள்ளார். அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் முதன்மைச் செயலாளர் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க சட்டத்தில் இடமில்லை. 
ஊரகச் சாலைகளைப் பராமரிக்க பெங்களூரு நகர மாவட்டத்திற்கு ரூ. 1.17 கோடி மட்டுமே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 29 மாவட்டங்களைப் புறக்கணித்து ரூ. 65 கோடி ஒதுக்கியதில் நேர்மை இல்லை. பெங்களூரு நகர மாவட்ட ஊராட்சித் தலைவர், முதல்வர் குடும்பத்தின் உறவினர். முதல்வருக்கு அவர் நேரடியாக அளித்த செயல் திட்டத்திற்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இது சட்டவிதிகளுக்குப் புறம்பானதாகும். எனது கவனத்திற்குக் கொண்டு வராமல், எனது துறையில் இருந்து எம்எல்ஏக்களின் கோரிக்கைக்கேற்ப ரூ. 774 கோடி அளவுக்கு நிதியை ஒதுக்கும் முடிவை முதல்வர் எடுத்துள்ளார். கட்சியின் (பாஜக) தலைவர் மற்றும் கட்சியின் மூத்தத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிறேன். மார்ச் 4}ஆம் தேதி ரூ. 460 கோடி மதிப்பிலானப் பணிகளுக்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இதிலும் என்னைக் கலந்தாலோசிக்கவில்லை.
விதிகளைப் பின்பற்றுமாறு முதல்வருக்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும், அமைச்சரவை சகாக்களின் நம்பிக்கையைப் பெறவும், அமைச்சர்களின் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கவும், அமைச்சரவை சகாக்களின் துறைகளில் தலையிடக் கூடாது என்று அறிவுறுத்தவும் வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT