இந்தியா

அவசரத் தேவைக்காக வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் சேமிப்பு: மத்திய அரசு பரிசீலனை

DIN

அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வெளிநாடுகளில் கச்சா எண்ணெய்யை சேமித்து வைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
 "சுயசார்பு நோக்கி எரிசக்தி பாதுகாப்பு' என்ற தலைப்பிலான மாநாடு செவ்வாய்க்கிழமை தில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தர்மேந்திர பிரதான் பேசியது:
 உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது. 85 சதவீதம் இறக்குமதி மூலமே நமது நாட்டின் கச்சா எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆப்பிரிக்கா, வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்பட 30 நாடுகளிலிருந்து இந்தியா தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
 கடந்த நிதியாண்டில் வெளிநாடுகளிலிருந்து 101.4 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் மூன்றில் இரண்டு பங்கு கச்சா எண்ணெயை, மத்திய கிழக்கு நாடுகளான இராக், சவூதி அரேபியா ஆகியவை அளித்தன.
 நீண்ட கால அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா, ரஷியா, அங்கோலா ஆகிய நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அமெரிக்காவிலும், வணிக ரீதியில் சாத்தியமான பிற வெளிநாடுகளிலும் கச்சா எண்ணெயை சேமித்து வைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
 மேலும், கத்தார் நாடு நமக்கு வழக்கமாக திரவ நிலையிலான எரிவாயு விநியோகம் செய்து வருகிறது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகளிலிருந்தும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது என்றார்.
 அவசரத் தேவைக்காக கச்சா எண்ணெய் சேமித்து வைப்பதில் இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக, இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஒப்பந்தம் செய்துகொண்டன. அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் இருப்பில் இந்தியாவும் சேமித்து வைக்கும் வாய்ப்பை உள்ளடக்கியது இந்த ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT