இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை

30th Sep 2020 12:27 PM

ADVERTISEMENT


லக்னெள: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், இது திட்டமிட்ட செயல் அல்ல என்றும் நீதிபதி எஸ்.கே. யாதவ் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை என்று கூறி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேரையும் விடுதலை செய்வதாக லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. பாபர் மசூதியை இடிக்க விடாமல், எல்.கே. அத்வானி, முரளிமனோகர் உள்ளிட்ட தலைவர்கள்தான் தடுக்க முயன்றுள்ளனர் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள் தவிர இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ராமஜென்மபூமி இயக்கத்தை முன்னெடுத்த பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேருக்கு மசூதி இடிப்பில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, 351 பேரிடம் விசாரணை நடத்தி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 600 பக்க அறிக்கையை லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனடிப்படையில் 48 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களில் 16 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து, செப்டம்பர் இறுதிக்குள் தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டது.

முரளி மனோகர் ஜோஷி கடந்த ஜூலை 23-ஆம் தேதியும், அத்வானி ஜூலை 24-ஆம் தேதியும் சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி முறையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.  இதேபோன்று கல்யாண் சிங், உமா பாரதி ஆகியோர் வெவ்வேறு நாள்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வழக்கில் தேவையின்றி தங்களை சிக்க வைத்திருப்பதாகவும், அரசியல் நெருக்கடி காரணமாக சிபிஐ தங்கள் மீது வழக்கு தொடுத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். வழக்கில் தொடர்புடைய 32 பேரும் வாக்குமூலம் அளித்துவிட்டதால் தீர்ப்பு எழுதும் பணியை நீதிபதி எஸ்.கே.யாதவ் நிறைவு செய்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், நீதிபதி எஸ்.கே. யாதவ் இன்று தனது தீர்ப்பை அளித்துள்ளார்.
 

Tags : Babri Masjid Case
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT