இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை (செப்.30) தீர்ப்பு

DIN

அரசியல் அரங்கில் முக்கிய வழக்காக இருந்து வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ராமஜென்மபூமி இயக்கத்தை முன்னெடுத்த பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேருக்கு மசூதி இடிப்பில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, 351 பேரிடம் விசாரணை நடத்தி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 600 பக்க அறிக்கையை லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதனடிப்படையில் 48 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களில் 16 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து, செப்டம்பர் இறுதிக்குள் தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டது.

முரளி மனோகர் ஜோஷி கடந்த ஜூலை 23-ஆம் தேதியும், அத்வானி ஜூலை 24-ஆம் தேதியும் சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி முறையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதேபோன்று கல்யாண் சிங், உமா பாரதி ஆகியோர் வெவ்வேறு நாள்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்த வழக்கில் தேவையின்றி தங்களை சிக்க வைத்திருப்பதாகவும், அரசியல் நெருக்கடி காரணமாக சிபிஐ தங்கள் மீது வழக்கு தொடுத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

வழக்கில் தொடர்புடைய 32 பேரும் வாக்குமூலம் அளித்துவிட்டதால் தீர்ப்பு எழுதும் பணியை நீதிபதி எஸ்.கே.யாதவ் தொடங்கினார். இந்த நிலையில், இந்த வழக்கில், நாளை (செப்டம்பர் 30) தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

அன்றைய தினம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT