இந்தியா

ஹத்ராஸில் நிகழ்ந்திருப்பது மனிதத் தன்மையற்றது: கோலி காட்டம்

29th Sep 2020 10:37 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலியான பெண்ணுக்கு நீதி கேட்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி குரல் கொடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்து வந்த 20 வயதான பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இதுகுறித்து வெளியில் செய்தி கசியாமல் இருக்க அப்பெண்ணின் நாக்கை அந்தக் கும்பல் வெட்டியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கழுத்து முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் செவ்வாய்க்கிழமை பலியானார்.

ADVERTISEMENT

இதுபற்றி விராட் கோலி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"ஹத்ராஸில் நிகழ்ந்திருப்பது மனிதத் தன்மையற்ற கொடுமைக்கும் அப்பாற்பட்டது. இந்தக் கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்." 

முன்னதாக, இந்தக் குற்றச் சம்பவத்தைக் கண்டித்து பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சப்தர்ஜங் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சந்திரசேகர் ஆசாத் தெரிவித்ததாவது:

"குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி தலித் சமூக மக்கள் அனைவரும் வீதிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசு நமது பொறுமையை சோதிக்கக் கூடாது. குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்." 

Tags : Kohli
ADVERTISEMENT
ADVERTISEMENT