இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: கர்நாடகத்தில் முழு அடைப்பு; விவசாயிகள்  போராட்டம்

29th Sep 2020 04:26 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு:  மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டமசோதாக்களைக் கண்டித்து, கர்நாடகத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தின்போது, விவசாயிகள், கன்னட ஆர்வலர்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக ஊக்குவிப்பு சட்ட மசோதா, விளைபொருள்களுக்கு உரிய விலை அளிக்க உத்தரவாதம் தரும் விவசாயிகள் (பாதுகாப்பு மற்றும் அதிகாரம்) சட்ட மசோதா; கர்நாடக சட்டப் பேரவையில் கர்நாடக அரசால் நிறைவேற்றப்பட்ட கர்நாடக நிலச் சீர்த்திருத்தச் சட்டத் திருத்தம், விளைபொருள் சந்தைப்படுத்தல்குழு சட்டத் திருத்தம் ஆகியவற்றை கண்டித்தும், இவற்றை திரும்பப் பெறக் கோரியும் கர்நாடகத்தில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஐக்கியப் போராட்டக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கர்நாடக மாநில கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம், கர்நாடக ரக்ஷண வேதிகே, கன்னடசலுவளி (வாட்டாள் கட்சி), லாரி உரிமையாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், கன்னட அமைப்புகள் உள்ளிட்ட 30}க்கும் அதிகமான அமைப்புகள் அறிவித்திருந்த இந்தப் போராட்டத்துக்கு, காங்கிரஸ், மஜத, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை: தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், கார்கள், வேன்கள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. 

ADVERTISEMENT

இதில் பொதுமக்கள் தங்குத் தடையின்றி பயணம் செய்தனர். உணவகங்கள் வழக்கம்போல இயங்கின. 

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை  வழக்கம் போல இயக்கப்பட்டன. ரயில் சேவை, விமான சேவை பாதிக்கவில்லை.  பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல திறந்திருந்தன. பால், காய்கறி, மருந்து, மளிகைப் பொருள்களின் சேவைகள் பாதிக்கவில்லை. அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. 

போராட்டம்: பெங்களூரு, ராமநகரம், மண்டியா,மைசூரு, சாமராஜ்நகர், கோலார், சிக்கபளாப்பூர், தும்கூரு, பெல்லாரி, ராய்ச்சூரு, சித்ரதுர்கா, கலபுர்கி, யாதகிரி, விஜயபுரா, பாகல்கோட், பீதர், பெலகாவி, வடகன்னடம், உடுப்பி, தார்வாட், தாவணகெரே உள்ளிட்ட மாவட்டங்களில்  விவசாயிகள், கன்னட அமைப்பினர் உள்ளிட்ட ஐக்கிய போராட்டக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மறியல் செய்து வாகனப் போக்குவரத்தை தடுத்தனர். ஆங்காங்கே ஊர்வலங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஒருசில இடங்களில் மோட்டார் வாகன ஊர்வலங்கள் நடத்தப்பட்டு, டயர்கள் எரிக்கப்பட்டன. பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸôர் கைதுசெய்து, மாலையில் விடுவித்தனர்.

பெங்களூரில் மைசூரு வங்கிச் சதுக்கம்,  எலஹங்கா, பெல்லாரிசாலை, ஆனந்த்ராவ் சதுக்கம், டவுன்ஹால் சதுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்பினர் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பேருந்துகளை தடுத்து நிறுத்திய கர்நாடக ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெüடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT