இந்தியா

ம.பி.: ரூ.108 கோடியில் கட்டப்பட்ட உயர்நிலைப் பாலம்: மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்

29th Sep 2020 12:16 AM

ADVERTISEMENT


புது தில்லி: ராஜஸ்தான் எல்லையையும், மத்திய பிரதேச எல்லையையும் இணைக்கும் வகையில் ரூ.108 கோடியில் கட்டப்பட்ட 1.4 கி.மீ. நீளம் கொண்ட உயர்நிலைப் பாலத்தை மத்திய  அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

இதுதொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் விழாவில் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டு உயர்நிலைப் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

இந்த விழாவில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமை தாங்கினார். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், மத்திய அமைச்சர் பகன் சிங் குலஸ்தே, மாநில எம்.பி.க்.கள், எம்.எல்.ஏக்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

மத்திய பிரதேச மாநிலத்தின் மோரேனா நகரத்தில் தேசிய நெடுஞ்சாலை(என்எச்) 3 - இல் கட்டப்பட்டுள்ள இந்த உயர் நிலைப் பாலம், ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரையும், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரையும் இணைக்கிறது. இந்த உயர்நிலைப் பாலத்தின் கட்டுமானப்பணிகள் 18 மாதங்களில் முடிவடைந்துள்ளது. 

4 வழிகளைக் கொண்ட உயர் நிலைப் பாலத்தின் உயர அமைப்பு 780 மீட்டராகும். மோரேனா நகரத்தில் இணைக்கும் இந்த பாலத்தினால் பயண நேரம் மிச்சமாகும், எரிபொருள் செலவு குறையுமென அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திறப்பு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த பாலத்தின் திட்டப்பணிகளுக்கு விரைவாக ஒப்புதல் அளித்ததுடன், குறித்த நேரத்தில் பணிகளை முடித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கும், இணையமைச்சர் வி.கே.சிங்குக்கும் நன்றி தெரி
வித்துக்கொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT