இந்தியா

குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளை மீண்டும் ஒத்திவைக்க யுபிஎஸ்சி எதிர்ப்பு

29th Sep 2020 04:20 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளை மீண்டும் ஒத்திவைக்க, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் அக்டோபர் 4 -ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வாசிரெட்டி கோவர்த்தன சாய் பிரகாஷ் என்பவர் உள்பட 20 பேர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

"நாட்டின் 72 நகரங்களில் அமைக்கப்படவுள்ள தேர்வு மையங்களில் சுமார் 6 லட்சம் பேர் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளை எழுதவுள்ளனர். இவர்களில் பல ஆயிரம் தேர்வர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களில் தேர்வு மையங்கள் இல்லாத நிலையில், அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

ADVERTISEMENT

கிராமப்புறங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பலர், பலநூறு கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது. தற்போதைய நிலையில், கரோனா தொற்று சூழல் மற்றும் பல மாநிலங்களில் பெருமழை வெள்ளம் ஆகியவற்றால் தேர்வர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்' என்று மனுவில் அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனு, திங்கள்கிழமை (செப்.28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதன்படி, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது, யுபிஎஸ்சி தரப்பு வழக்குரைஞர் முன்வைத்த வாதம்: குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் மே மாதம் 31}ஆம் தேதி நடைபெறும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து தேர்வுகள் அக்டோபர் 4}ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, தேர்வுகளை மீண்டும் ஒத்திவைக்க முடியாது. தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை யுபிஎஸ்சி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கு விசாரணை மீண்டும் புதன்கிழமை நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT