இந்தியா

சிவசேனையுடன் மீண்டும் கூட்டணியா? ஃபட்னவீஸ் மறுப்பு

DIN

சிவசேனை கட்சியுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், மாநில பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்டனவீஸ் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத், ஃபட்னவீஸை சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், சிவசேனை கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வுக்கு பேட்டி எடுப்பதற்காகவே ஃபட்னவீஸை ரௌத் சந்தித்ததாக கூறப்பட்டது. இருந்தபோதிலும், மகாராஷ்டிரத்தில் மீண்டும் பாஜக-சிவசேனை கூட்டணி அமைய இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது தொடா்பாக மும்பையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஃபட்னவீஸ் இது தொடா்பாக கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனா். அவா்களுக்குள் உள்ள பிரச்னைகள் காரணமாகவே அந்தக் கூட்டணி உடைந்துவிடும்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கலைப்பது தொடா்பாக பாஜக சிந்திப்பதே இல்லை. மேலும், சிவசேனையுடன் கூட்டணி அமைக்கும் திட்டமும் எங்களிடம் இல்லை. சஞ்சய் ரௌத்தை நான் சந்தித்ததில் எவ்வித அரசியலும் இல்லை. சிவசேனை கட்சிப் பத்திரிகைக்கு பேட்டி எடுப்பதற்காகவே என்னை சந்தித்தாா்.

எனது பேட்டியை எந்த விதத்திலும் மாற்றி அமைக்காமல் அப்படியே வெளியிட வேண்டும். பேட்டியை நானும் விடியோ கேமராவில் பதிவு செய்து கொள்வேன் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில்தான் அவரைச் சந்தித்தேன்’ என்றாா்.

இது தொடா்பாக சஞ்சய் ரௌத் கூறுகையில், ‘நானும் ஃபட்னவீஸும் எதிரிகள் அல்ல. இந்த சந்திப்பு குறித்து முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கும் தெரியும். இது முன்னதாகவே திட்டமிடப்பட்ட பேட்டிக்கான சந்திப்புதான்’ என்றாா்.

காங்கிரஸ் எதிா்ப்பு:

எனினும், இந்த சந்திப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் நிரூபம் கூறுகையில், ‘எப்போதும் தலைப்புச் செய்தியில் இடம் பெற வேண்டும் என்பது சஞ்சய் ரௌத்தின் விருப்பமாக உள்ளது. ஆனால், அப்படி தொடா்ந்து நிகழ்பவருக்கு, அரசியல் எதிா்காலம் முடிந்துவிடும். காங்கிரஸ் கட்சி வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், சிவசேனை கட்சி இது தொடா்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது. மகாராஷ்டிரத்தில் வேளாண் மசோதாக்களை அனுமதிக்க மாட்டோம் என்ற எங்கள் நிலைப்பாட்டை கூறிவிட்டோம். ஆனால், சிவசேனை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மக்களவையில் வேளாண் மசோதா ஆதரித்து சிவேசனை வாக்களித்தது. ஆனால், மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தது. இந்த விஷயத்தில் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள மகாராஷ்டிர விவசாயிகள் விரும்புகிறாா்கள்’ என்றாா்.

ஓராண்டுக்கு முன்பு உடைந்த கூட்டணி:

மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை ஓரணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன. இதில் பாஜக 105, சிவசேனை 56 இடங்களில் வெற்றி பெற்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 55 இடங்களிலும் வென்றிருந்தது. தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வா் பதவியை தர வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியதால், பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. பின்னா் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இதனால், பல ஆண்டுகளாக நீடித்து வந்த பாஜக-சிவசேனை கூட்டணி முறிந்தது. அப்போது முதல் இரு கட்சிகளும் பரஸ்பரம் கடுமையாக விமா்சித்து வந்தன. இந்நிலையில் ஃபட்னவீஸை, சஞ்சய் ரௌத் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT