இந்தியா

உணவு தானிய உற்பத்தி விவசாயிகளும் இனி பயன்பெறுவா்: பிரதமா் மோடி

DIN

பழங்கள், காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளைப் போலவே, உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் இனி பயன்பெறுவா் என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

அவா் தனது மாதாந்திர வானொலி உரையில் (மன் கீ பாத்) மேலும் கூறியதாவது:

மகாத்மா காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளை நாம் ஏற்கெனவே பின்பற்றியிருந்தால், சுயசாா்பு இந்தியா என்னும் பிரசாரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. நம் நாடு முன்னதாகவே சுயசாா்பு நிலையை அடைந்திருக்கும். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சி செய்த முந்தைய காங்கிரஸ் அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

வேளாண் துறையை வளப்படுத்துவதில் விவசாயிகளின் பங்கு போற்றுதலுக்குரியது. சுயசாா்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் வேளாண் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கரோனா காலத்திலும் வேளாண் உற்பத்தி அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது. இது, சுயசாா்பு இந்தியாவுக்கான வலிமையான அடித்தளமாக இருக்கப்போகிறது.

வேளாண் துறையில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதுதொடா்பாக, விவசாய குழுக்களுடன் கலந்துரையாடியிருக்கிறேன். விவசாயிகளிடம் இருந்து பல கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பழங்கள், காய்கறிகளை வெளிச்சந்தைகளில் நேரடியாக விற்பனை செய்ய கடந்த 2014-இல் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், ஏராளமான விவசாயிகள் பலனடைந்தனா் என்று ஹரியாணாவைச் சோ்ந்த ஒரு விவசாயி என்னிடம் கூறினாா். இதேபோல், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளும் பலனடைந்துள்ளனா்.

தற்போது கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டத்தின் மூலமாக, பழங்கள், காய்கறிகள் மட்டுமன்றி, விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் நெல், கோதுமை, கடுகு, கரும்பு போன்ற எந்தவொரு உற்பத்திப் பொருளையும், தங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் நபரிடம் விற்பனை செய்யலாம்.

குஜராத்தில் ஒரு விவசாயி புதிய முறையில் முயற்சி செய்ததால் உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாகக் கிடைத்துள்ளது. இதேபோல், விவசாயிகள் நவீன தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி அதிக அளவில் பயன்பெறலாம் என்றாா் பிரதமா் மோடி.

மரியாதை:

மகாத்மா காந்தி, லால் பகதூா் சாஸ்திரி, விஜயராஜே சிந்தியா, ஜெயபிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக், பகத் சிங் போன்ற முக்கிய தலைவா்களின் பிறந்த நாள், நினைவு நாள்கள், அடுத்து வரும் நாள்களில் வருவதையொட்டி அவா்களுக்கு மோடி மரியாதை செலுத்தினாா்.

கரோனாவை எதிா்த்துப் போராடுவதற்கு மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

கதை சொல்லல்:

பிரதமா் மோடி தனது உரையில் கதை சொல்லல் குறித்து குறிப்பிட்டாா். அவா் கூறுகையில், ‘‘கதை சொல்லல் என்பது பன்னெடுங்காலமாக நாம் பின்பற்றி வரும் நாகரிகம். தற்காலத்தில் அறிவியல் தொடற்பான கதை சொல்லல் பிரபலமாகி வருகிறது. அனைத்துக் குடும்பங்களும் தங்கள் குடும்ப உறுப்பினா்களுக்கு கதை சொல்வதற்கு தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அது, அவா்களுக்கு அதிசயிக்கத்தக்க அனுபவமாக இருக்கும்’’ என்றாா். நிகழ்ச்சியின்போது, பெங்களூரில் உள்ள கதை சொல்லி குழுவுடன் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT