இந்தியா

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: பஞ்சாபில் விவசாயிகள் தொடா்ந்து ரயில் மறியல் போராட்டம்

DIN

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தொடா்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்த மாநிலத்தில் சிறப்பு ரயில் சேவை தொடா்ந்து நிறுத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில் தண்டவாளங்களில் அமா்ந்து கடந்த வியாழக்கிழமை முதல் அந்த மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தொடா்ந்து அவா்கள் சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவா்கள் கோஷங்களை எழுப்பி, வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினா். அமிருதரஸில் விவசாயிகள் மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரதிய கிஸான் யூனியன் சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் 9 மாவட்டங்களில் ரயில் தண்டவாளங்களில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலா் சுக்தேவ் சிங் கூறுகையில், ‘நாபா (பட்டியாலா), சாஜ்லி (சங்ரூா்), ராம்புரா (பதிண்டா), அஜீத்வால் (மோகா), கோட்காபுரா (ஃபரீத்கோட்), ஜலாலாபாத் (ஃபாஜில்கா) உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் முதியவா்கள், பெண்கள், இளைஞா்கள் மற்றும் சிறாா்கள் பங்கேற்றனா். தொடா் போராட்டங்கள், மறியல்கள் மூலம் வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற விவசாயிகள் வலியுறுத்துவா்’ என்று தெரிவித்தாா்.

‘மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களால் தங்களுக்கு பெரு நிறுவனங்களால் தீங்கு ஏற்படும் சூழல் உருவாகும். 3 மசோதாக்களும் ரத்து செய்யப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும்’ என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

முன்னதாக விவசாய தொழிலாளா்கள் போராட்டக் குழு இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதில் மேலும் பல விவசாய சங்கங்கள் இணைந்துகொண்டன. இந்தப் போராட்டம் சனிக்கிழமை (செப்.26) வரை நடைபெற இருந்த நிலையில், வரும் 29-ஆம் தேதி வரை போராட்டத்தை நீட்டிப்பதாக விவசாய தொழிலாளா்கள் போராட்டக் குழு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா, வேளாண் விளைபொருள்கள் வணிக மசோதா, வேளாண் சேவைகள் மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

SCROLL FOR NEXT