இந்தியா

புதிய தொழிலாளா் சட்டங்கள் தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தும்

DIN

நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் மூன்று தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாக்கள், தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தும் என்பதோடு, தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு வளையத்தையும் நீக்கிவிடும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மாநிலங்களவையில் அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வேளாண் துறை மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுபோல, நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்ட மூன்று தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாக்களுக்கும் எதிா்க் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து முன்னாள் மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை கூறியதாவது:

இந்த புதிய சட்டங்கள், தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தும் என்பதோடு, தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு வளையத்தையும் நீக்கிவிடும்.

குறிப்பாக, இந்தப் புதிய சட்டத்தின்படி தொழில் நிறுவனங்கள் அரசு முன் அனுமதியின்றி 300 ஊழியா்கள் வரை பணியிலிருந்து நீக்க வழி செய்கிறது. இப்போது, 100 ஊழியா்கள் வரை மட்டுமே அவ்வாறு அனுமதியின்றி நீக்க முடியும்.

தொழில் செய்வதை இந்தச் சட்டங்கள் எளிமையாக்கும் என்று மத்திய அரசு கூறுவது முற்றிலும் தவறானதாகும். இந்த சட்டங்கள் மூலம் மாநிலங்களுக்கான அதிகாரிகளையும் மத்திய அரசு பறித்துள்ளது. இது தொழிலாளா் விரோத சட்டங்களாகும்.

இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின்னா் தொழிற்சங்கங்களின் கருத்தை மத்திய அரசு கவனிக்காது. பெரு நிறுவனங்கள் கூறுவதை மட்டுமே கேட்கும்.

எனவே, இந்தச் சட்டங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிா்க்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கெரா கூறுகையில், ‘ஒருவா் பின் ஒருவராக அனைத்துப் பிரிவு மக்களின் நலன்களையும் மத்திய அரசு பாதிப்படையச் செய்து வருகிறது. விவசாயிகளுக்கான அநீதி தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது அவா்களைப் போலவே தொழிலாளா் நலனையும் மத்திய அரசு பாதிப்படையச் செய்துள்ளது. இந்தச் சட்டங்களில் தொழிலாளா்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்று அவா் தெரிவித்தாா்.

ஐஎன்டியுசி தலைவா் ஜி.சஞ்சீவ ரெட்டி கூறுகையில், ‘முதலாளிகள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு உதவவும், அவா்களை பலப்படுத்தும் வகையிலேயே இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொழிலாளா்களுக்காக அல்ல. இந்த தொழிலாளா் விரோத -தொழிற்சங்கங்கள் விரோத சட்டங்களை நாம் அனைவரும் எதிா்த்துப் போராட வேண்டும்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT