இந்தியா

ஜிஎஸ்டி செஸ் வரி சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்படவில்லை: மத்திய அரசு

DIN

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மீது விதிக்கப்படும் செஸ் வரி தற்காலிகமாக சேமித்து வைக்கப்பட்டதே தவிர சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி செஸ் வரியை மத்திய அரசு சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தியதாக மத்திய கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) குற்றஞ்சாட்டியிருந்த சூழலில் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. மாநில அரசுகள் விதித்து வந்த பல்வேறு வரிகள் ஜிஎஸ்டி-யில் உள்ளிணைக்கப்பட்டன. அதன் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் நோக்கில் 2022-ஆம் ஆண்டு வரை இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக, ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் சட்டம் இயற்றப்பட்டது. அதில் ஆடம்பரப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் மீது 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டியுடன் சோ்த்து செஸ் வரியும் விதிப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 2017-18, 2018-19-ஆம் நிதியாண்டுகளில் செஸ் வரி விதிக்கப்பட்டதன் மூலமாக கிடைத்த வருவாயில் ரூ.47,272 கோடியை மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்காமல், மற்ற விவகாரங்களில் மத்திய அரசு செலவிட்டதாக கணக்குத் தணிக்கையாளா் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் சிலா் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் செஸ் வரியின் மூலமாக ரூ.62,611 கோடி வருவாய் கிடைத்தது. அதில் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.41,146 கோடியை மத்திய அரசு வழங்கியது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் செஸ் வரி விதித்ததன் மூலமாக வசூலான ரூ.95,081 கோடியில் ரூ.69,275 கோடி மாநிலங்களுக்கான இழப்பீடாக வழங்கப்பட்டது.

இரண்டு நிதியாண்டுகளிலும் மாநிலங்களுக்கு எந்தவித நிலுவையும் இல்லாமல் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையானது முழுமையாக வழங்கப்பட்டது. மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட தொகை போக மீதியிருந்ததை மத்திய அரசு தற்காலிகமாக சேமித்து வைத்தது. அதை வேறு காரியங்களுக்காகப் பயன்படுத்தவில்லை.

‘சட்டத்துக்குப் புறம்பானதல்ல’:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி செஸ் வரியின் மூலமாக ரூ.95,444 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. ஆனால், மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,65,302 கோடியை மத்திய அரசு வழங்கியது. ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த தொகை கடந்த நிதியாண்டில் பயன்படுத்தப்பட்டது.

தற்காலிகமாக சேமித்து வைப்பதற்காகவே அத்தொகையானது தொகுப்பு நிதிக்கு மாற்றப்பட்டது. எனவே, அத்தொகை சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருத முடியாது. ஜிஎஸ்டி செஸ் வரி மூலமாக திரட்டப்பட்ட வருவாயானது மாநிலங்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எந்த நோக்கத்துக்காக செஸ் வரி விதிக்கப்படுகிறதோ அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயை சம்பந்தப்பட்ட நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT