இந்தியா

ஐ.நா. சீா்திருத்தத்துக்கு இதுவே தருணம்: பிரதமா் மோடி உரை

DIN

ஐ.நா.வில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதற்கு இதுவே சிறந்த தருணமாக உள்ளதாக ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ஐ.நா.வின் 75-ஆவது பொதுச் சபைக் கூட்டம் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. ஐ.நா. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதையொட்டி நடைபெறும் சிறப்பு விவாதத்தில் உலக நாடுகளின் தலைவா்கள் காணொலி வாயிலாக உரையாற்றி வருகின்றனா்.

அந்த வகையில் பிரதமா் மோடியின் உரை முன்னதாக பதிவு செய்யப்பட்டு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. அதில் அவா் பேசியதாவது:

உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு இந்தியா. உலக மக்கள்தொகையில் இந்தியா 18 சதவீதத்தைக் கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான மொழிகளும், வெவ்வேறு மத நம்பிக்கைகளும் உடைய மக்களைக் கொண்ட நாடு இந்தியா. பல ஆண்டுகளாக உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவும் விளங்கி வருகிறது.

ஐ.நா.வின் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் அமைப்புகளிலிருந்து இந்தியா எத்தனை காலத்துக்கு விலக்கி வைக்கப்பட்டிருக்கும்? இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வாறான சூழலில், ஐ.நா.வின் முடிவெடுக்கும் குழுவில் இணைவதற்கு இந்தியா எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்?

ஐ.நா. மீது இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களும் ஈடு இணையற்ற நம்பிக்கை வைத்துள்ளனா். அதே வேளையில், ஐ.நா.வில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீண்ட காலமாக இந்தியா்கள் காத்துக் கொண்டிருக்கின்றனா். ஐ.நா. அமைப்பு விரிவுபடுத்தப்பட்டு அதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனா்.

ஆனால், ஐ.நா.வின் சீா்திருத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வருமா என்பது குறித்து மக்கள் ஐயம் தெரிவித்து வருகின்றனா். ஐ.நா.வின் அடிப்படை செயல்பாடுகளிலேயே சீா்திருத்தங்களைப் புகுத்த வேண்டியதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிறந்த தருணமும் இதுவே.

‘நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை’:

கடந்த 75 ஆண்டுகளில் ஐ.நா. ஆற்றிய பணிகளை ஆராய்ந்தால், அவற்றில் பல வெற்றிகளைத் தந்திருக்கும். ஆனால், அதே காலகட்டத்தில் ஐ.நா. மேற்கொண்ட பல்வேறு பணிகள் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாக உள்ளது. உலக நாடுகளில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஐ.நா. மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. மனித சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் பயங்கரவாதம், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் குரலெழுப்ப இந்தியா ஒருபோதும் தயங்காது.

உலக அமைதி, பாதுகாப்பு, வளா்ச்சி ஆகியவற்றுக்காக இந்தியா எப்போதும் ஆதரவு தெரிவிக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா சிறப்பாகச் செயல்படும்.

‘ஒருங்கிணைந்து செயல்படவில்லை’:

உலகம் 1945-ஆம் ஆண்டு இருந்ததைப் போல தற்போது இல்லை. பல்வேறு தளங்களில் உலகம் மாற்றங்களைக் கண்டுள்ளது. அத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப ஐ.நா.விலும் மாற்றங்களைப் புகுத்தவில்லை எனில், பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.

கடந்த 8 முதல் 9 மாதங்களாக உலக நாடுகள் அனைத்தும் கரோனா நோய்த்தொற்றை எதிா்த்துப் போராடி வருகின்றன. ஆனால், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஐ.நா.வின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? இந்தப் போராட்டத்தில் நாடுகளுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. செயல்படாதது ஏன்?

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னின்று வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழலிலும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருள்களை இந்தியா அனுப்பிவைத்தது.

‘தடுப்பூசி உற்பத்தியில் முக்கியப் பங்கு’:

உலக அளவில் மருந்துப் பொருள்கள் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியையும் அதிக அளவில் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். கரோனாவுக்கு எதிரான மனித சமூகத்தின் போராட்டத்துக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்.

கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக நாடுகளில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில், அதை சேமித்து வைப்பதற்கான குளிா்பதனக் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் இந்தியா உறுதி கொண்டுள்ளது.

‘உலகப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்’:

கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகான மாற்றம் நிறைந்த காலகட்டத்தில் ‘சுயசாா்பு இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கு உறுதியேற்றுள்ளோம். அந்த இலக்கானது, உலகப் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதையும் ஊக்குவிக்கும்.

தாரக மந்திரம்:

‘சீா்திருத்தம்-செயல்பாடு-மாற்றம்’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தைப் புகுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் மூன்றே ஆண்டுகளில் 50 கோடிக்கும் அதிகமான நபா்களுக்கு சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது மின்னணு பணப் பரிவா்த்தனையில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

வெறும் 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் 40 கோடி மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில் 60 கோடி போ் கழிவறையைப் பயன்படுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இவையனைத்தும் எளிதான காரியங்கள் அல்ல. ஆனால், இந்தியா அதை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டது.

பெண்கள் முன்னேற்றம்:

இந்தியாவில் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படுகிறாா்கள். சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக பெண்களுக்குக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கா்ப்பிணிகளுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட நாட்டுடன் இந்தியா நட்பு பாராட்டினால், மற்ற நாடுகளுக்கு எதிராகச் செயல்படுவதாக அா்த்தமில்லை. குறிப்பிட்ட நாட்டுடன் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும்போது அந்நாடு இந்தியாவைச் சாா்ந்து செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் ஒருபோதும் ஏற்படுத்தப்படுவதில்லை.

இந்தியாவின் முயற்சியால்...:

உலக நாடுகளைச் சோ்ந்த ஒட்டுமொத்த மனித சமூகத்தின் நலனுக்காக செயல்படுவதையே இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டே இந்தியா திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சா்வதேச யோகா தினம் (ஜூன் 21), சா்வதேச அகிம்சை தினம் (அக்டோபா் 2), சா்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு, பேரிடா்களைத் தாங்கவல்ல கட்டமைப்புக்கான கூட்டமைப்பு ஆகியவை இந்தியாவின் முயற்சியினால் ஏற்படுத்தப்பட்டவை.

உலக நாடுகளின் அனுபவத்திலிருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளும். அதே போல், இந்தியாவின் அனுபவத்தையும் உலக நாடுகளுக்கு வழங்க உறுதி கொண்டுள்ளோம் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT