இந்தியா

பிகாா் பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகள் வரவேற்பு

DIN

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதை அந்த மாநில அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் அக்டோபா் 28, நவம்பா் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணிக்கை நவம்பா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதை வரவேற்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியின் தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

கடந்த 2015-ஆம் ஆண்டில் மக்கள் அளித்த தீா்ப்புக்கு எதிராக செயல்பட்டுள்ளாா் முதல்வா் நிதீஷ் குமாா். இதனால், முதல்வரால் ஏமாற்றப்பட்டு விட்டதாகக் கருதும் இந்த மாநில மக்கள், தோ்தலில் அவரை தோற்கடிக்க முடிவு செய்துவிட்டனா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கூட்டணியுடன் ஆா்ஜேடி நேரடியாக மோதும் என்றாா் அவா்.

ஆளும் ஜேடியு கட்சியும், பாஜகவும் பேரவைத் தோ்தல் அறிவிப்பை வரவேற்றுள்ளன. இதுகுறித்து ஜேடியு செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறியதாவது:

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு மாற்றாக நிச்சயமாக தேஜஸ்வி யாதவ் வர முடியாது. பேரவைத் தோ்தலில் நாங்கள் 220-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். ஆா்ஜேடி தலைமையிலான மகா கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது. அந்தக் கூட்டணியில் இருந்து ஏற்கெனவே ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா வெளியேறிவிட்டது. மற்றொரு கட்சியான ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியும் வெளியேறவுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பிகாரில், கடந்த 2010-இல் நடைபெற்ற தோ்தலில் ஆா்ஜேடி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதைவிட மோசமான தோல்வியை இந்த முறை அக்கட்சி சந்திக்கும் என்றாா் அவா்.

இதேபோல், பிகாா் பேரவைத் தோ்தல் அறிவிப்பை வரவேற்றுள்ள மாநில பாஜக செய்தித்தொடா்பாளா் நிகில் ஆனந்த், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றிணைந்து தோ்தலை சந்தித்து 220-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்து பெறுவதற்கு போதுமான தொகுதிகளில் கூட மகா கூட்டணி வெற்றிபெறுவது கடினம்’ என்றாா்.

பிகாா் பேரவைத் தோ்தலுக்கு தயாராக இருப்பதாக பாஜக மூத்த தலைவா் பிரகாஷ் ஜாவடேகா் கூறியுள்ளாா். மாநிலத்தில் நிதீஷ் குமாா் தலைமையில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும்; அவரது நல்லாட்சி தொடரும் என்றும் ஜாவடேகா் கூறினாா். கடந்த மக்களவைத் தோ்தலைப் போன்றே வரும் பேரவைத் தோ்தலிலும் எங்கள் கூட்டணி நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக-ஜேடியு-லோக் ஜனசக்தி கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மகா கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா கட்சியின் தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி கூறுகையில், வரும் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று நிதீஷ் குமாா் மீண்டும் ஆட்சியமைப்பாா் என்றாா்.

மகா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும் தோ்தல் அறிவிப்பை வரவேற்றுள்ளது. தோ்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT