இந்தியா

முல்லைப் பெரியாறு பாதுகாப்பு விவகாரம்: மேற்பார்வைக் குழுவுக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க கேரளம், தமிழக அரசுகளுக்கு உத்தரவு

23rd Sep 2020 04:21 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவுக்கு எதிராக தாக்கலான மனுவுக்கு பதில் அளிக்க தமிழக, கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
 இந்த விவகாரம் தொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோ ஜோசப் உள்ளிட்ட மூவர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு, தனக்குக் கீழ் செயல்படும் வகையில் ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளது. அணைப் பாதுகாப்பு, பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுதான் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கான அதிகாரம் உண்டு. அந்தப் பணியை துணைக் குழுவுக்கு அளிக்கக் கூடாது. குறிப்பாக பருவமழைக் காலங்களின் போதும், பருவமழை தொடங்குவதற்கும் முன்பும் இந்த ஆய்வை மேற்பார்வைக் குழு மேற்கொள்ள வேண்டும்.
 அணையில் நீரைத் தேக்குவது, பகிர்ந்தளிப்பது, திறக்கும் விகிதம், அணையைத் திறப்பது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் ஒரு திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். மேற்பார்வைக் குழு அதன் அதிகாரங்களையும், பணிகளையும் அதற்கு கீழ் உள்ள துணைப் பிரநிதிகள் குழுவுக்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்கோ அளிக்காமல் இருக்கும் வகையில், உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அணையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் 2018}ஆம் ஆண்டில் மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட அணைப் பாதுகாப்பு ஆய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய நீர்வள ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு கடந்த செப்டம்பர் 9}ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் சகோதரரான வழக்குரைஞர் ஆஜரானது தெரிய வந்ததால், வழக்கை விசாரிப்பதில் இருந்து தாம் விலகும் வகையில் நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் தலைமையிலான வேறு அமர்வுக்கு வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
 இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் தலைமையில் நீதிபதிகள் நவீன் சின்ஹா, இந்திரா பானர்ஜி ஆகியோர்அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞர்கள் ஜி. உமாபதி, யோகேஷ் கண்ணா ஆகியோரும், மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் கோபகுமாரன் நாயர் உள்ளிட்டோரும், கேரள அரசின்தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா, அரசு வழக்குரைஞர் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோரும் ஆஜராகினர்.
 அப்போது, ஜோ ஜோசப் மனு மீது தமிழக அரசு, கேரள அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த ரசூல் ஜாய், 2017}இல் தாக்கல் செய்திருந்த மனுவுடன் ஜோ ஜோசப் உள்ளிட்டோர் தாக்கல் செய்த ரிட் மனுவையும் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT