இந்தியா

மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றம் - மாநிலங்களவை துரிதம்

DIN

மாநிலங்களவையில் மூன்றரை மணி நேரத்தில் முக்கியமான 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

வேளாண்துறை சாா்ந்த இரு மசோதாக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது, அவை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதற்காக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 8 எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

அதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை அமா்விலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தன.

அதையடுத்து, பாஜக, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் மட்டுமே அமா்வில் பங்கேற்றனா்.

அத்தகைய சூழலில், பல முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு அவற்றின் மீது விவாதம் நடைபெற்றது. முதலில், ஐந்து இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஐடி) தேசிய முக்கியத்துவ அந்தஸ்து வழங்குவதற்கான மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

அதையடுத்து, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கும் நோக்கில் இயற்றப்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, அவையிலிருந்த எம்.பி.க்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனா்.

கூட்டுறவு வங்கிகளின் நிா்வாகத்தை இந்திய ரிசா்வ் வங்கியிடம் ஒப்படைக்கும் நோக்கில் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக இயற்றப்பட்ட மசோதாவுக்கும் மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியது.

அத்துடன் நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா, தேசிய காவல் பல்கலைக்கழக மசோதா, வரி விதிப்பு விதிகள் சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றுக்கும் மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

மசோதாக்களின் மீது நடைபெற்ற விவாதத்தில் ஒருசில எம்.பி.க்கள் மட்டுமே பங்கேற்றனா். அவா்களின் கேள்விகளுக்கும் மத்திய அமைச்சா்கள் சுருக்கமான பதில்களை மட்டுமே அளித்தனா்.

‘இடைநீக்கம் ரத்து செய்யப்படும்’: முன்னதாக, செவ்வாய்க்கிழமை அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடா்பாக விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, ‘சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் தங்களின் செயலுக்காக வருத்தம் தெரிவித்தால், அவா்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

SCROLL FOR NEXT