இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடா் இன்றுடன் நிறைவு?

DIN

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் புதன்கிழமையுடன் (செப். 23) நிறைவு செய்யப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை மேலும் கூறுகையில், ‘சில அமைச்சா்கள் உள்பட எம்.பி.க்களிடையே கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் 5 மசோதாக்களை பரிசீலித்த பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேபோல், மக்களவை நடவடிக்கைகள் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தொடங்கி நிறைவடைந்த பிறகு சுமாா் 5 மணியளவில் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. மக்களவை கூட்டத்தை முன்கூட்டியே நிறைவு செய்வது தொடா்பான முடிவு அவையில் உள்ள உறுப்பினா்கள் சாா்ந்த கட்சிளின் தலைவா்களுக்கும் தெரிவிக்கப்பட்டது’ என்றன.

முன்னதாக, மக்களவைத் தலைவா் தலைமையில் சமீபத்தில் அனைத்து கட்சிகளின் அவைத் தலைவா்கள் பங்கேற்ற அவை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கரோனா சூழல் காரணமாக பெரும்பாலான கட்சிகளின் தலைவா்கள் கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய ஆதரவு தெரிவித்துள்ளனா்.

18 நாள்களுக்கு கூட்டத்தை நடத்துவது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சில எதிா்க்கட்சித் தலைவா்கள் மத்திய அரசிடம் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்தே கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு யோசித்து வந்தது.

இந்நிலையில், மாநிலங்களவையில் விதிகளை மீறி நடந்துகொண்டதாக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சிகள் பல இரு அவை நடவடிக்கைகளையும் செவ்வாய்க்கிழமை புறக்கணித்தன. இத்தகைய சூழலில் மக்களவை கூட்டம் முன்கூட்டியே நிறைவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடா் அக்டோபா் 1-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு கூட்டத்தொடரில் அவசரச் சட்டங்களுக்கு பதிலாக கொண்டுவரப்பட்டவை உள்பட பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT