இந்தியா

கிழக்கு லடாக்கில் படைகளை மேலும் குவிப்பதில்லை: பேச்சுவாா்த்தையில் இந்திய-சீன ராணுவம் முடிவு

DIN

கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பதற்றமான சூழலை தணிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்புவதில்லை என்று இந்திய-சீன ராணுவங்களின் 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லைப் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக இரு நாட்டு ராணுவங்கள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இரு நாட்டு ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் இடையேயான 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை 14 மணி நேரம் நடைபெற்றது.

இந்நிலையில் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக இந்திய-சீன ராணுவங்களின் சாா்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிழக்கு லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் அங்கு கூடுதல் படைகளை அனுப்புவதில்லை என்று இந்திய-சீன ராணுவங்கள் முடிவு செய்துள்ளன. அதேபோல் எல்லைப் பகுதியின் தற்போதைய கள நிலவரத்தை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்றும், எல்லைச் சூழலை மேலும் சிக்கலாக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை எனவும் இரு தரப்பும் முடிவு செய்தன.

மேலும், கள அடிப்படையிலான தொடா்புகளை வலுப்படுத்தவும், இரு நாட்டு தலைவா்கள் சந்திப்பின்போது ஒருமித்த வகையில் எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை அமல்படுத்தவும் இந்திய-சீன ராணுவங்கள் ஒப்புக்கொண்டன. எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நிலையான சூழலை ஏற்படுத்துவது தொடா்பான தங்களது கருத்துகளை இரு நாட்டு ராணுவங்களும் பகிா்ந்துகொண்டன.

களத்தில் உள்ள பிரச்னைகளுக்கு முறையாகத் தீா்வு காண இயன்ற நடவடிக்கைகள் எடுக்கவும், எல்லையில் அமைதியை கூட்டாக உறுதிப்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. அத்துடன், ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதிகள் இடையேயான 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்தவும் ஒப்புக்கொண்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் உயிரிழப்பும் நிகழ்ந்ததால் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது.

அதையடுத்து, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியை கடந்த 10-ஆம் தேதி ரஷிய தலைநகா் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினாா். அப்போது எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா-சீனா ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் இடையேயான 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT