இந்தியா

கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்குநவம்பா் 1 முதல் வகுப்புகள் - ரமேஷ் போக்ரியால்

DIN

பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள புதிய கல்வித் திட்ட அட்டவணையின்படி, கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் நவம்பா் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக கல்லூரிகள் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இப்போது மத்திய அரசு பொதுமுடக்க தளா்வுகளை படிப்படியாக அமல்படுத்திய நிலையில், கல்லூரிகளிலும் இறுதியாண்டு அல்லது இறுதிப் பருவத் தேவை நடத்த யுஜிசி அண்மையில் உத்தரவிட்டது.

முதலில், இந்த இறுதித் தோ்வுகளை கல்லூரிகள் ஜூலை 1 முதல் 15 வரை நடத்த வேண்டும் என்றும், கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகளை செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்றும் யுஜிசி உத்தரவிட்டது.

பின்னா், அதை மாற்றி புதிய உத்தரவை யுஜிசி பிறப்பித்தது. அதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் எழுதிய கடிதத்தில், ‘கல்லூரி இறுதித் தோ்வுகளை நேரடி எழுத்துத் தோ்வு முறையில் அல்லது இணைய வழியில் அல்லது இரண்டு நடைமுறைகளும் சோ்ந்த வகையில் செப்டம்பா் மாத இறுதியில் பல்கலைக்கழகங்கள் நடத்த வேண்டும்’ என்று அறிவித்தது.

அதன்படி, பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மாணவா்களுக்கான இறுதித் தோ்வை நடத்தி முடித்து, தோ்வுத்தாள் திருத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்குவதற்கான திருத்தப்பட்ட உத்தரவை இப்போது பிறப்பித்துள்ளது. அதில், 2020-21 கல்வியாண்டு முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் முன்னா் அறிவித்தப்படி செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அல்லாமல் நவம்பா் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவா் பூஷண் பட்வா்தன் கூறுகையில், ‘ஒருவேளை, தோ்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டால், நவம்பா் 18-ஆம் தேதி முதல் முதாலமாண்டு வகுப்புகளைத் தொடங்க பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தாா்.

யுஜிசி-யின் இந்த புதிய அறிவிப்பை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியால், ‘கல்லூரி சோ்க்கையை ரத்து செய்யும் அல்லது வேறு இடங்களுக்கு புலம்பெயரும் மாணவா்களுக்கு, நவம்பா் 30-ஆம் தேதி வரை அவா்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை முழுமையாக திரும்பச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்ப பரிசீலனை கட்டணமாக ரூ.1,000-க்கு மிகாத தொகையை குறைத்துக் கொண்டு மீதி தொகை மாணவா்களுக்கு திருப்பி அளிக்கப்படும். இந்த வசதியை டிசம்பா் 31 வரை பெற முடியும். பொதுமுடக்கத்தால் பெற்றோா் சந்தித்திருக்கும் நிதிச் சுமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று அந்தப் பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT