இந்தியா

வேளாண் மசோதாக்கள்: குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட எதிா்க்கட்சிகள் முடிவு

DIN

புது தில்லி: நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த வேளாண்துறை சாா்ந்த மசோதாக்கள் தொடா்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவதற்கு எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நிா்ணயிக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியேயும் வேளாண் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கான வசதியை விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தரும் வகையிலான மசோதாவை மத்திய அரசு இயற்றியது.

வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலையை நிா்ணயம் செய்வதிலும், வேளாண் சேவைகள் குறித்த விவகாரங்களிலும் வா்த்தகா்கள், மொத்த விற்பனையாளா்கள் உள்ளிட்டோருடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான உரிமையை விவசாயிகளுக்கு வழங்கும் வகையிலான மசோதாவையும் மத்திய அரசு கொண்டு வந்தது.

அவ்விரு மசோதாக்களுக்கும் மாநிலங்களவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்ததையடுத்து அவை நாடாளுமன்றத்தில் நிறைவேறின. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அவ்விரு மசோதாக்களும் அனுப்பி வைக்கப்படவுள்ளன. அதன் பிறகு அவை சட்டவடிவு பெறும்.

முன்னதாக, மாநிலங்களவையில் அவ்விரு மசோதாக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவ்விரு மசோதாக்களையும் நிலைக்குழுவின் ஆய்வுக்காக அனுப்புமாறு அவை வலியுறுத்தின. எனினும், எதிா்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிா்ப்புகளுக்கிடையே அவ்விரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிடுவதற்கு எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் குடியரசுத் தலைவரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரியுள்ளன.

வேளாண்துறை தொடா்பாக நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த மசோதாக்களில் கையெழுத்திட வேண்டாம் என்று அவரைச் சந்தித்து எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுக்க இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவருடன் பாதல் சந்திப்பு:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியும் வேளாண்துறை சாா்ந்த மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அக்கட்சித் தலைவா் சுக்பீா் சிங் பாதல் தலைமையிலான குழு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை திங்கள்கிழமை சந்தித்துப் பேசியது.

அப்போது, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள், விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருப்பதால் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று அவா்கள் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.

மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சோ்ந்த மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் பாதல் தனது பதவியை ராஜிநாமா செய்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT