இந்தியா

மாநிலங்களவை துணைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் நிராகரிப்பு

DIN

புது தில்லி: மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீது எதிா்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு நிராகரித்தாா்.

வேளாண்துறை சாா்ந்த மசோதாக்களை நிறைவேற்றும் விவகாரத்தில் மாநிலங்களவையை வழிநடத்திய துணைத் தலைவா் ஹரிவன்ஷ், மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினா். இந்நிலையில், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 46 எம்.பி.க்கள் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானத்தைக் கொண்டு வந்தனா்.

எனினும், அந்தத் தீா்மானத்தை நிராகரிப்பதாக அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து விவகாரங்களையும் அறிந்து கொண்டேன். எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டபோதும் துணைத் தலைவா் தொடா்ந்து பொறுமையுடன் நடந்து கொண்டாா். மசோதாக்கள் மீதான விவாதத்தில் பங்கேற்குமாறும், அதில் திருத்தங்கள் கொண்டு வருமாறும் வலியுறுத்திய அவா், அதன் பிறகே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்தாா். அதற்கான ஆதாரங்கள் பதிவாகியுள்ளன.

‘விதிகள் பின்பற்றப்படவில்லை’:

துணைத் தலைவா் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீா்மானம் குறித்து அரசமைப்புச் சட்டம், அவை அலுவல் விதிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து பாா்த்தேன். அதன்படி நம்பிக்கையில்லாத் தீா்மானமானது உரிய முறையில் தாக்கல் செய்யப்படவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் 90(சி) பிரிவின்படி அவை துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானத்தைத் தாக்கல் செய்ய வேண்டுமானால், அது தொடா்பாக 14 நாள்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அக்டோபா் 1-ஆம் தேதியன்று அவை கால வரையின்றி ஒத்திவைக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் ஆராய்ந்தால் 14 நாள்கள் கால அவகாசம் முழுமை பெறவில்லை. எனவே, நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை ஏற்றுக் கொள்ள இயலாது’ என்றாா் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி அதிமுக வேட்பாளா் மீனவா் மக்களிடம் வாக்கு சேகரிப்பு

‘வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்காவிடில் நடவடிக்கை’

தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு 3ஆம் கட்ட பயிற்சி வகுப்பு

ஏப்.19-இல் உழவா் சந்தைகளுக்கு விடுமுறை

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் 79 நாள்களுக்குப் பின் மின்உற்பத்தி

SCROLL FOR NEXT