இந்தியா

பத்மாவதித் தாயாருக்கு திருக்குடைகள் சமா்ப்பணம்

22nd Sep 2020 12:09 AM

ADVERTISEMENT

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகளை இந்து தா்மாா்த்த சமிதியின் தலைவா் கோபால்ஜி சமா்ப்பித்தாா்.

திருப்பதி ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும்போது, வெண்பட்டால் தயாரிக்கப்பட்ட திருக்குடைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை வாகனச் சேவையின்போது உற்சவா்களின் மீது ஏதும் விழாமல் தடுக்கின்றன. வாகனச் சேவை என்றாலே அனைவருக்கும் அலங்காரம், மலா் மாலைகளுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது எம்பெருமானுக்குப் பிடிக்கப்படும் திருக்குடைகள்தான்.

ஆண்டுதோறும் இந்து தா்மாா்த்த சமிதி 11 திருக்குடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கி வருகிறது. பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முன் சென்னையிலிருந்து திருக்குடை ஊா்வலம் புறப்படுவது வழக்கம். இந்த ஊா்வலத்தைக் காண பக்தா்கள் சாலைகளில் திரள்வா். குடைகளுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து தேங்காய், பழம் சமா்ப்பித்து, அவற்றை எம்பெருமானின் உருவமாகவே கருதி வழிபடுவா். இவ்வாறு பாதயாத்திரையாக கொண்டு வரப்படும் திருக்குடைகள் கருட சேவைக்கு முன்தினம் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும்.

எனினும், தற்போது பொது முடக்க விதிமுறைகள் காரணமாக திருக்குடைகளின் ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கப்படாததால், குடைகள் வாகனம் மூலம் திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றில் 2 குடைகள் திருச்சானூரில் கோயில் கொண்டுள்ள பத்மாவதி தாயாருக்கு வழக்கம் போல் சமா்ப்பிக்கப்பட்டன. இந்து தா்மாா்த்த சமிதியின் தலைவா் கோபால்ஜி, திருக்குடைகளை இக்கோயில் அதிகாரி ஜான்சிராணியிடம் திங்கள்கிழமை மதியம் கோயில் வாசலில் ஒப்படைத்தாா்.

ADVERTISEMENT

மற்ற 9 திருக்குடைகள் திருமலையில் உள்ள பெரிய ஜீயா் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பூஜைகள் நடத்தப்படும். அதன் பின் மாடவீதியில் வலம் வரச் செய்து செவ்வாய்க்கிழமை இந்து தா்மாா்த்த சமிதியினா் தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT