இந்தியா

'பிற நோயாளிகளும் காப்பாற்றப்பட வேண்டியவர்களே'

IANS


புது தில்லி: ஒரு நாட்டில் தலைநகராக இருப்பதால், பல்வேறு ஊர்களில் இருந்தும் பல நோயாளிகள், உயர் மருத்துவ சிகிச்சைக்காக தில்லிக்கு வருகிறார்கள். தங்கள் ஊரில் கிடைக்காத சிகிச்சை இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.

தில்லியில் தரமான சிகிச்சை கிடைக்கும், குணமடையலாம் என்ற நம்பிக்கையோடு வரும் நோயாளிகளுக்கு, கரோனா நோயாளிகளுக்கு அதிக படுக்கை வசதிகளை ஒதுக்கியிருப்பதால் மறுக்கப்படும் சிகிச்சையால் வலியுடனே வாழும் துன்பத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் மரணத்தை தழுவுகிறார்கள்.

தில்லியில் உள்ள 33 தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் 80 சதவீத தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால், பிற நோய் பாதித்து கவலைக்கிடமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நிலை மோசமாகியுள்ளது. இதுவரை தங்களுக்கு ஏற்பட்ட நோய்க்கு எதிராகப் போராடி வந்த நோயாளிகள், தற்போது தங்களுக்கு படுக்கை வசதி கிடைக்கவும் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல முக்கிய உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டு, இன்னும் சில காலம் வலியுடனே வாழும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கிழக்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 68 வயது நபர் புவனேஷ்வர் தயால். கல்லீரல் பாதித்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். நிலைமை மோசமடைந்து மருத்துவமனைக்கு வந்தால், அறுவை சிகிச்சையை தள்ளிப்போடுங்கள் என்று கூறிவிட்டது மருத்துவமனை.

38 வயதான அனஹிதா தியாகி. மார்பகப் புற்றுநோய் பாதித்து காஸியாபாத்தில் இருந்து தில்லிக்கு வந்துள்ளார். மூன்று முறை கீமோதெரபி கொடுத்து, தற்போது அடுத்தக்கட்ட சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். "நான் புற்றுநோயில் இருந்து விடுபடவே விரும்புகிறேன். கரோனாவால் மரணிக்க அல்ல" என்று கூறும் அனஹிதா, தில்லியில் இருந்து வெளியே இருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்துள்ளேன் என்கிறார்.

இதுபோல பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்காக தில்லியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளுக்கு மாநிலம் விட்டு மாநிலம் வந்திருக்கும் நோயாளிகள் பலரும், வேறு மாநிலங்களில் இருக்கும் மருத்துவமனைகளை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கரோனா அச்சத்தால் மாரடைப்பு, புற்றுநோய், நரம்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட நோயாளிகள்கூட தற்போது மருத்துவமனைக்கு வருவதில்லை. வந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதி படுக்கை வசதிகள் இல்லை என்கிறார் தனியார் மருத்துவமனை மருத்துவர்.

இதே நிலை நீடித்தால், கரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கையை விட, இதர நோயால் பலியாவோர் எண்ணிக்கை அதிகமாகும் என்றும், புற்றுநோய் போன்ற நோய்களை முன்கூட்டியே கண்டறிந்தால் மட்டுமே பிழைக்க வைக்க முடியும் என்ற நிலையில், இப்படி பிற நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவதும், அவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதும் தள்ளிப்போவதும் உயிரிழப்புகளை அதிகரிக்கவே செய்யும். அதுமட்டுமல்ல, சினை முட்டை புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுத்து நான்கு வாரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு கீமோதெரபிக்குப் பிறகு பொதுமுடக்கம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாத பல நோயாளிகள் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

கரோனா பொதுமுடக்கத்தால் ஏராளமான புற்றுநோயாளிகள் தங்களுக்கான உயிர் பிழைக்கும் வாய்ப்புகளை இழந்துவிட்டனர். இன்னும் இது நீடிக்கும்பட்சத்தில் பிற நோயாளிகளின் உயிரிழப்பு கரோனா பலியை விட அதிகமாக மாறக்கூடும்.

புற்றுநோயாளிகளைப் பொறுத்தவரை இரண்டு மாதங்கள் என்பதே மிகப்பெரிய காலம். அதற்குள் புற்றுநோய் முதல் கட்டத்தில் இருந்து மூன்றாவது கட்டத்தை அடைந்துவிடும். எனவே இந்த விவகாரத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் அரசு செயல்பட வேண்டும் என்பதே மருத்துவமனை நிர்வாகங்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT