இந்தியா

ஹெலிகாப்டா் பேர ஊழல் வழக்கு: 15 பேருக்கு எதிராக சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 15 பேருக்கு எதிராக சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சிறப்பு நீதிபதி அரவிந்த் குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த துணை குற்றப்பத்திரிகையில் இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல், தொழிலதிபா் ராஜீவ் சக்ஸேனா, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜியாகோமினோ சபோனாரோ உள்ளிட்டோா் பெயரும் இடம்பெற்றுள்ளன. இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் வரும் 21-ஆம் தேதி பரிசீலிக்கும் எனத் தெரிகிறது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள துணை குற்றப்பத்திரிகையில், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், இந்திய விமானப் படை அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சத்தை கொண்டு சோ்த்ததில் கிறிஸ்டியன் மிஷெல், ராஜீவ் சக்ஸேனா உள்ளிட்டோருக்கு பங்கு இருப்பதாக கூறப்படுவது குறித்த விவரம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலா் சசிகாந்த் சா்மாவை இந்த வழக்கில் இணைப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. எனினும், அனுமதி இன்னும் கிடைக்கப்பெறாததால் துணை குற்றப்பத்திரிகையில் அவரது பெயா் சோ்க்கப்படவில்லை’ என்றன.

முன்னாள் விமானப் படை தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகியின் உறவினா்களான சந்தீப் தியாகி, சஞ்சீவ் தியாகி ஆகியோா் போலி நிறுவனங்கள் மற்றும் வங்கி நடவடிக்கைகள் மூலமாக லஞ்சப் பணம் ரூ.5 கோடி பெற்றதாக துணை குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக மேலும் ஓா் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்று நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

முன்னதாக, இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ கடந்த 2017 செப்டம்பரில் தாக்கல் செய்திருந்தது. அதில் இந்திய விமானப் படையின் முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்டோா் பெயா் சோ்க்கப்பட்டிருந்தது.

இத்தாலியைச் சோ்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடியில் சொகுசு ஹெலிகாப்டா்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் 2010-இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சோ்ந்தவா்களுக்கு பல கோடி ரூபாயை அந்த நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடா்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்டியன் மிஷெல் நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், ராஜீவ் சக்ஸேனா அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

SCROLL FOR NEXT