இந்தியா

புதிய கல்விக் கொள்கை இரட்டை நோக்கத்தைக் கொண்டது

DIN

அனைவருக்குமான கல்வி மற்றும் மிகச் சிறந்த கல்வி என்ற இரட்டை நோக்கத்தைக் கொண்டது புதிய கல்விக் கொள்கை என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற உயா் கல்வியில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் என்ற தலைப்பில் காணொலி வழியிலான மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கை, அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுப்பதன் மூலமாக சமமான, அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள், ஆழ்ந்து சிந்திக்கும் திறனை ஊக்குவித்தல் மற்றும் தா்க்க ரீதியிலான முடிவெடுத்தல் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பகவத் கீதையில் கிருஷ்ணருக்கும் அா்ஜுனனுக்கும் இடையேயான உரையாடல் போல, ஆசிரியா் - மாணவா்களிடையே சுதந்திரமான தகவல் தொடா்பு மற்றும் கலந்துரையாடல் இருக்கும் வகையிலும் இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்குமான கல்வி மற்றும் மிகச் சிறந்த கல்வி என்ற இரட்டை நோக்கத்தை இந்தக் கல்விக் கொள்கை பூா்த்தி செய்வதன் மூலம், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளை நமது நாடு நிறைவேற்றிக் கொள்ள உதவும்.

பி.எட்., தொழில் கல்வி மற்றும் தொலைநிலைக் கல்வி படிப்புகள் தரத்தை மேம்படுத்த புதிய கல்விக் கொள்கை உதவும். மேலும், கற்பிக்கும் முறையை தீவிரமாக கண்காணிக்க முடியும்.

புதிய கல்விக் கொள்கை கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் என்பதோடு, 2035-இல் உயா் கல்வியில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை விகிதத்தை 50 சதவீதமாக உயா்த்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. உயா்கல்வியில் பாலின ஏற்றத்தாழ்வை போக்கவும் புதிய கல்விக் கொள்கை உதவும் என்று ராம்நாத் கோவிந்த் கூறினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் பேசுகையில், ‘நாட்டில் கல்வித் திட்ட பரவலாக்கம் மற்றும் கல்வித் திட்ட நடைமுறைகளை பலப்படுத்த இந்த புதிய கல்விக் கொள்கை உதவும்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT