இந்தியா

மாநிலங்களவையில் நிகழ்ந்தது வெட்கத்துக்குரியது: ராஜ்நாத் சிங்

20th Sep 2020 08:15 PM

ADVERTISEMENT


மாநிலங்களவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்தது வெட்கத்துக்குரியது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஜ்நாத் சிங் உள்பட 6 மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

"மாநிலங்களவையில் இன்று நடந்தது வருத்தமளிக்கிறது, துரதிருஷ்டவசமானது, வெட்கத்துக்குரியது. அவையில் விவாதங்களை நடத்துவது ஆளும் தரப்பின் பொறுப்பு. அதேசமயம், அவையில் கண்ணியம் காப்பது எதிர்க்கட்சிகளின் கடமை. எனக்குத் தெரிந்த வரை மக்களவை, மாநிலங்களவை வரலாற்றில் இதுபோன்று நிகழ்ந்ததில்லை. இது மாநிலங்களவையில் நிகழ்வது இன்னும் பெரிய விஷயம். பொய்யான தகவல்களின் அடிப்படையில் விவசாயிகளைத் தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று நிகழ்ந்தது அவையின் கண்ணியத்துக்கு எதிரானது.

நானும் விவசாயிதான். குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு நடைமுறைகள் முடிவுக்கு வராது என்று நாட்டு விவசாயிகளுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" என்றார்.

மாநிலங்களவைத் துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருப்பது பற்றி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "மாநிலங்களவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் முடிவெடுப்பார். அரசியல் ரீதியாக நான் எதையும் கூற விரும்பவில்லை. இது மாநிலங்களவைத் தலைவரின் அதிகாரத்துக்குட்பட்டது" என்றார்.

மத்திய அமைச்சரவையிலிருந்து ஹர்சிம்ரத் கௌர் பாதல் ராஜிநாமா செய்தது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், "ஒவ்வொரு முடிவுக்குப் பின்னணியிலும் சில அரசியல் காரணங்கள் உள்ளன. அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை" என்றார்.

Tags : rajnath singh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT