இந்தியா

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

20th Sep 2020 07:39 PM

ADVERTISEMENT

வேளாண்மை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய வேளாண்மைத் துறை வரலாற்றில் இது திருப்புமுனை தருணமாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது சுட்டுரையில், ``இந்திய வேளாண்மைத் துறையின் வரலாற்றில் திருப்புமுனை தருணம். முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது குறித்து, கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்குப் பாராட்டுகள். இந்த மசோதாக்கள் நிறைவேறியதால் வேளாண்மைத் துறையில் முழுமையான நிலைமாற்றங்கள் ஏற்படுவது உறுதி செய்யப்படுவதுடன், கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யப்படும்.
பல தசாப்த காலங்களாக இந்திய விவசாயிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியிருந்தது, இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் மூலம் இதுபோன்ற எதிர்மறை சூழல்களில் இருந்து விவசாயிகள் விடுதலை பெறுவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக ஆக்கும் முயற்சிகளுக்கு இந்த மசோதாக்கள் புதிய உந்துதலைக் கொடுக்கும். அவர்களுக்கு அதிக வளமை கிடைப்பது உறுதி செய்யப்படும்.
கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு உதவியாக நவீன தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இப்போது இந்த மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதன் மூலம், உற்பத்தியைப் பெருக்கும் மற்றும் நல்ல விளைச்சலைத் தரும் வகையிலான எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் எளிதில் கிடைக்கும். இது வரவேற்புக்குரிய ஒரு படிநிலை. 
நான் இதை முன்பு கூறியிருக்கிறேன், மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்: குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை தொடரும். அரசுக் கொள்முதல் தொடரும். நம் விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு ஆதரவான எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம். வரக்கூடிய தலைமுறைகளில் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்தையும் செய்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
 

Tags : PMMODI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT