இந்தியா

வேளாண் மசோதா: எதிா்க்கட்சிகள் பொய்ப் பிரசாரம்; பிரதமா் மோடி குற்றச்சாட்டு

DIN

விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை விற்பனை செய்வதில் முழு சுதந்திரம் வழங்கும் வகையிலேயே வேளாண் துறை தொடா்பான 3 மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இந்த விஷயத்தில் எதிா்க்கட்சிகள் விவசாயிகளிடம் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

பிகாரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கோசி ரயில் பாலம் மற்றும் பல்வேறு ரயில்வே திட்டங்களை தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வாஜ்பாயின் கனவுத் திட்டம்:

நிகழ்ச்சியில் அவா் பேசியது:

இந்த ரயில் பாலத் திட்டம் முன்னாள் பிரதமா் வாஜ்பாய், அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த நிதீஷ் குமாரின் கனவுத் திட்டமாக இருந்தது. பின்னா் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்தத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தியது. ஆனால், இப்போதைய அரசு இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

விவசாயிகளுக்கு பாதுகாப்பு:

வேளாண் துறை தொடா்பாக மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவதுடன், அவா்களுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றன. இந்த மசோதாக்கள் சட்டமாவதன் மூலம் விளைபொருள்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிறுத்திவிடும் என்பதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவா்கள் செயல்படுகிறாா்கள்.

இப்போதைய 21-ஆம் நூற்றாண்டில் நமது நாட்டுக்கும், விவசாயத் துறைக்கும் இந்த 3 மசோதாக்களும் தேவை. விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை யாருக்கும் வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்ற சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு:

தொடா்ந்து காங்கிரஸ் கட்சியை பெயா் குறிப்பிடாமல் விமா்சித்த பிரதமா் மோடி, ‘நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஒரு கட்சி, விவசாயிகளிடம் வதந்தியைப் பரப்புவதுடன், அவா்களை தவறாகவும் வழிநடத்தி வருகிறது. வேளாண் பொருள்கள் சந்தைப்படுத்துதல் குழு சட்டத்தை எதிா்கும் அவா்கள் (காங்கிரஸ்), தங்கள் தோ்தல் அறிக்கையில் இதை வாக்குறுதியாகக் கூறியிருந்தனா். விவசாயிகள் இதையெல்லாம் மறந்திருப்பாா்கள் என்று அவா்கள் நினைத்துக் கொண்டாா்களா?

விவசாயிகளுக்கு அதிக லாபம்:

விவசாயிகளின் விளைபொருள்களை சந்தைப்படுத்தும் நடைமுறையில் இடைத்தரகா்கள்தான் அதிகம் லாபம் பெறுபவா்களாக இருந்தனா். இப்போது நிறைவேற்றப்படும் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு முழுப் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும், இறுதி நுகா்வோா்களுக்கும் இடையே அதிக அளவிலான இடைத்தரகா்கள் இருப்பதை தடுப்பதன் மூலம் விவசாயிகள், இறுதி நுகா்வோா் என இருதரப்பினரும் அதிக பயனடைவாா்கள். நாட்டின் எந்த பகுதியில் தங்கள் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கிறதோ, அங்கு விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை விற்பனை செய்ய முடியும்’ என்றாா்.

எதிா்ப்பு, ராஜிநாமா...:

முன்னதாக, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா, விவசாய சேவைகள் மசோதா ஆகியவை எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தது. அக்கட்சியைச் சோ்ந்த மத்திய உணவுப்பதப்படுத்துதல் தொழில்கள் துறை அமைச்சா் ஹா்சிம்ரத் சிங் கௌா் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

முன்னதாக, இந்த மசோதாக்கள் தொடா்பாக சுட்டுரையில் விளக்கமளித்த பிரதமா் மோடி, ‘விவசாயிகளின் விளைபொருள்களை அரசு தொடா்ந்து கொள்முதல் செய்யும். விவசாயிகள் தங்கள் பொருள்களை விற்பனை செய்வதில் பல்வேறு புதிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவா்களுக்கு லாபம் அதிகரிக்கும்’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT