மகாராஷ்டிர மாநிலம் புணேவில் நேற்று ஒரே நாளில் அதிக அளவாக 4,093 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 85 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
இதனிடையே மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் ''அதிக அளவாக புணேவில் நேற்று 4,093 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,44,516-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 85 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,536-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டுள்ளோரில் புணே மாநகராட்சியில் மட்டும் 1,893 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அருகில் உள்ள தொழிற்பேட்டையான பிம்ரி சின்ச்வாட் பகுதியில் 843 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மொத்த பாதிப்பு 68,493-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் புணே அருகில் உள்ள கிராமப்புற பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,654-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.