இந்தியா

எம்.பி.க்களுக்கான ஊதியக் குறைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

18th Sep 2020 03:44 PM

ADVERTISEMENT


புது தில்லி: எம்.பி.க்களுக்கான ஊதியத்தை 30 சதவீதம் குறைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடந்த செவ்வாயன்று இந்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, மாநிலங்களவையில் இன்று எம்.பி.க்களுக்கான ஊதியக் குறைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. தொழிலக உற்பத்தி, மக்களின் தேவை ஆகியவை குறைந்ததால் நாட்டின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன் காரணமாக மத்திய அரசுக்கான வருவாயும் குறைந்தது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டிய கட்டாயமும் அரசுக்கு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற எம்.பி.க்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தைக் குறைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதற்காக அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியையும் 2020-21 மற்றும் 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் நிறுத்திவைப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது.

இந்நிலையில், ஊதியக் குறைப்பு அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறும் நோக்கில் ‘நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படிகள், ஓய்வூதிய சட்டத் திருத்த மசோதா- 2020’, மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த மசோதா மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக கூடுதல் நிதி தேவைப்படுகிறது. அதற்கு எம்.பி.க்களின் பங்களிப்பும் அவசியமாக உள்ளது.

எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தற்காலிகமாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால், அதைச் சமாளிப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது’ என்றாா்.

அதையடுத்து, மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக பெருவாரியான எம்.பி.க்கள் வாக்களித்தனா்.

மாநிலங்களவையில் இன்று அந்த மசோதாவை உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Tags : parliament
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT