இந்தியா

பொருளாதாரத்தை போர்க்கால அடிப்படையில் மீட்டெடுக்க ஆர்பிஐ தயார்

17th Sep 2020 02:35 AM

ADVERTISEMENT

புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பரவலால் சரிவைச் சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தயாராக உள்ளதாக அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 23.9 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு இத்தகைய பொருளாதார வீழ்ச்சியை நாடு சந்தித்ததில்லை. 

இந்நிலையில், இந்திய தொழில், வர்த்தக சம்மேளனங்களின் 
கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில் புதன்கிழமை நடைபெற்ற காணொலிக் காட்சி வாயிலான கருத்தரங்கில் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது கரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. எனினும், கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறிகள் சில துறைகளில் தென்பட்டன. 

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சிப் பாதையே நோக்கித் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே வேளையில், பொருளாதார வளர்ச்சி, பணப்புழக்கத்தை அதிகரிப்பது, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது உள்ளிட்டவை தொடர்பான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. நிதி சந்தைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்படும் நேரத்தில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.நாட்டில் உள்ள தலைசிறந்த 100 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வங்கிகள் அளித்த கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அது தொடர்பாக பரிசீலிக்கப்படும். அவ்வாறான சூழலில் சேமிப்புகளுக்கான வட்டி விகிதம், வங்கியின் நிதி நிலைமை உள்ளிட்டவை குறித்து கருத்தில் கொள்ளப்படும்.

சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகளின் வாராக்கடன் அளவு உச்சநிலையை அடைந்தது. அத்தகைய சூழல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை ஆர்பிஐ உறுதி செய்யும் என்றார் சக்திகாந்த தாஸ்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT