இந்தியா

மின் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் சட்ட வரைவு வெளியீடு: கருத்துகளை தெரிவிக்க செப்.30 கடைசி நாள்

17th Sep 2020 02:04 AM

ADVERTISEMENT


புது தில்லி: மின் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முதன் முறையாக சட்ட வரைவு ஒன்றை மத்திய மின்துறை அமைச்சகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. 
"மின் நுகர்வோர் உரிமைகள் சட்ட வரைவு 2020' என்ற இந்த வரைவுச் சட்டம் குறித்து கருதுகளையும், ஆலோசனைகளையும் மத்திய அமைச்சகம் வரவேற்றுள்ளது. இந்த கருத்துக்களைத் தெரிவிக்க செப்டம்பர் 30 கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 
அனைத்து குடிமக்களுக்கும் மின் சேவை அளிக்கப்பட வேண்டும் என்பதோடு, திருப்திகரமான மின் சேவை அளிக்க வேண்டியது இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனைக் கருத்தில்கொண்டே இந்த நுகர்வோர் உரிமைகள் சட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. 
மின் இணைப்பை விரைவாகவும், எளிமையான நடைமுறைகள் மூலமும் பெறுவது, 10 கிலோ வாட் திறன் மின் இணைப்பை பெறுவதற்கு இரண்டு ஆவணங்கள் மட்டும் போதுமானது, புதிய மின் இணைப்பை கொடுப்பதற்கான காலஅளவு என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இந்த வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, பெருநகரங்களில் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். பிற நகராட்சிப் பகுதிகளில் 15 நாள்களிலும், கிராமப்புறங்களில் விண்ணப்பித்த 30 நாள்களுக்குள்ளும் புதிய மின் இணைப்பு அல்லது ஏற்கெனவே உள்ள மின் இணைப்பை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 
ரூ.1,000 அல்லது அதற்கு மேலான மின் கட்டணங்கள் இணைய வழியில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். மின் சேவை தொடர்பான புகார்களுக்கு வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையிலான கட்டணமில்லா அழைப்பு மையம், புதிய மின் இணைப்பு, மின் இணைப்பைத் துண்டித்தல், மறு இணைப்பு, இணைப்பை மாற்றுத்தல், இணைப்பு பெயர் மாற்றம் என்பன உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்தபடியே பெறும் வகையில் செல்லிடப்பேசி செயலி அறிமுகம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த சட்ட வரைவில் இடம்பெற்றுள்ளன. 
இந்த வரைவு குறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் வரைவு இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT