இந்தியா

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவை வழக்குகள்: ஆயுள் தண்டனை கிடைக்கக் கூடிய வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்

17th Sep 2020 02:13 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளில், அதிகபட்ச தண்டனை கிடைக்கக் கூடிய வழக்குகளை முதலில் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடவும், அரசியல் கட்சி தொடங்கவும், அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கவும் தடை விதிப்பதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவை வழக்கு விவரங்களை வழங்க உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் என்.வி.ரமணா, சூர்யகாந்த், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்குரைஞர்கள் விஜய் ஹன்சாரியா, சினேகா கலிதா ஆகியோரையும் நியமித்தது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மொத்த வழக்கு விவரங்களையும், அவை நிலுவையில் இருப்பதற்கான காரணங்களையும் விளக்கி இந்த இரு வழக்குரைஞர்களும் நீதிமன்றத்தில் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில், அறிக்கை விவரங்களை ஹன்சாரியா விளக்கினார்.
 அப்போது, ஊழல் தடுப்பு சட்டம், பணமோசடி தடுப்பு சட்டம் போன்ற வழக்குகள் கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநில உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் மீதான சில வழக்குகளில் விசாரணை துரிதப்படுத்தப்படவில்லை. பல வழக்குகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதே நிலுவையில் உள்ளது. அத்துடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது, அரசுத் தரப்பு வழக்குரைஞர் நியமிக்கப்படாதது, சாட்சிகள் அழைக்கப்படாதது போன்ற பல்வேறு நிலைகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 நிலுவை வழக்குகளில் 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான தண்டனை கிடைக்கக் கூடிய வழக்குகள், ஊழல், மோசடி, போக்úஸா, வன்கொடுமை தொடர்பான வழக்குகளை முதலில் விசாரிக்கலாம் என்று ஹன்சாரியா தெரிவித்தார்.
 பின்னர், இதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வழக்குரைஞர் ஹன்சாரியா வழங்கிய பரிந்துரைகளில் மத்திய அரசுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. மேலும், இந்த வழக்குகளில் எவற்றுக்காவது உயர்நீதிமன்றங்கள் தடை விதித்தாலும், அவற்றை விரைந்து முடிக்கும்படி உச்சநீதிமன்றம் உரிய வழிகாட்டுதலையும் வழங்கலாம்.
 இந்த வழக்குகளை முடிப்பதற்கு சிபிஐ உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பும் தடையாக இருக்காது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இது தொடர்பாக நீதிமன்றம் எந்த வழிகாட்டுதலை வழங்கினாலும் அவற்றை அரசு வரவேற்கும்.
 ஆயுள் தண்டனை விதிக்கப்படக் கூடிய வழக்குகள், ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்கலாம். சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் அவற்றைப் பயன்படுத்தியது தொடர்பான அறிக்கையை மாநிலங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றார்.
நாடு முழுவதும் முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 4,442 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது பதவியில் இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது மட்டும் 2,556 வழக்குகள் இருப்பதாகவும், ஊழல் தடுப்பு சட்டம், நிதி மோசடி, போக்úஸா உள்ளிட்ட சிறப்புச் சட்டங்களின் கீழ் மட்டும் 200க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஹன்சாரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT