இந்தியா

இந்திய-சீன எல்லையில் கடந்த 6 மாதங்களில் எந்தவொரு ஊடுருவலும் இல்லை: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

17th Sep 2020 02:08 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்திய-சீன எல்லையில் கடந்த 6 மாதங்களில் எந்தவொரு ஊடுருவலும் நிகழவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த பதிலை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், "இது லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு அவமானம்' என்று கூறியுள்ளது.
எல்லை ஊடுருவல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
இந்திய-சீன எல்லையில் கடந்த 6 மாதங்களில் எந்தவொரு ஊடுருவலும் நடைபெறவில்லை. அதே நேரம், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இதே கால கட்டத்தில் 47 முறை ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
மேலும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 594 ஊடுருவல் முயற்சிகளை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மேற்கொண்டு, அதில் 312 முறை இந்தியாவில் ஊடுவியுள்ளனர் என்று பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, "ஜம்மு-காஷ்மீரில் கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினரால் 582 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற பயங்கரவாதிகளுடனான சண்டையில் 76 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர்' என்று கூறினார்.
காங்கிரஸ் விமர்சனம்: மத்திய அரசின் இந்த பதிலை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நிகழ்வுகளை ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும். முதலில், இந்திய எல்லைப் பகுதியை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அதன் பிறகு, சீனாவைச் சேர்ந்த வங்கியிடமிருந்து மிகப் பெரிய கடனதவி பெறப்பட்டது. பின்னர், இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இப்போது, எந்தொவரு ஊடுருவலும் நடைபெறவில்லை என்று உள்துறை இணையமைச்சர் கூறியுள்ளார். மோடி அரசு இந்திய ராணுவத்தின் பக்கமா அல்லது சீனாவின் பக்கமா என்ற சந்தேகம் எழுகிறது. பிரதமர் மோடி ஏன் மிகவும் பயப்படுகிறார்' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்திதொடர்பாளர் பவண் கெரா கூறுகையில், "மத்திய அரசின் இந்த இரண்டாவது அதிர்ச்சிகரமான பதிலின் மூலம் சீனாவுக்கு நற்சான்று கொடுக்கப்பட்டுள்ளது. இது கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி வீர மரமணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானமாகும்' என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT