இந்தியா

முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுத் தேதியை நீட்டிக்கக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி

17th Sep 2020 03:15 AM | நமது நிருபர்

ADVERTISEMENT

 

புது தில்லி:  முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கான தேதியை நீட்டிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை  உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை  15 நாள்களுக்கு நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று  கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. 
அதில், "தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின்போது விடுபட்டுள்ள இடங்களை பூர்த்தி செய்வதற்கான  (ஙஞட மட)  நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில்,  கரோனா தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு, கலந்தாய்வுக்கான கடைசித் தேதியை 15 நாள்கள் நீட்டிக்க அனுமதிக்க உத்தரவிட  வேண்டும்' எனக்  கோரப்பட்டிருந்தது. 
மத்திய அரசு பதில் மனு: இந்த மனுவுக்கு மத்திய அரசு  தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்திருந்தது.  அதில்,  "தற்போது தமிழகத்திற்கு தேதி நீட்டிப்பு அளித்தால், அதைப் போன்று பிற மாநிலங்களும் கலந்தாய்வு கடைசித் தேதியை நீட்டிக்கும் கோரிக்கையை முன்வைக்கும். ஆகவே, தமிழகத்திற்கு மட்டும் கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது' என்று தெரிவித்திருந்தது.
கலந்தாய்வை நீட்டிக்கக் கோரிக்கை: இந்நிலையில், தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன்  புதன்கிழமை  விசாரணைக்கு வந்தது.  அப்போது,  தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெயந்த் முத்துராஜ்,  வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா ஆகியோர்,  "கரோனா சூழல் காரணமாக,  முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான  கலந்தாய்வு தேதியை 15 நாள்கள் நீட்டிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர்.
மனு தள்ளுபடி: அப்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ்,  "இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்பட்டு நடைமுறைகள் முடிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் தேதியை நீட்டிப்பதால்,  மாணவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். ஆகவே, இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்வதுதான் நன்றாக இருக்கும்'  என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து,  தமிழக அரசின்  மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT