இந்தியா

கரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது

17th Sep 2020 04:41 AM

ADVERTISEMENT


புது தில்லி : நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. புதிதாக 90,123 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் 82,961 பேர் குணமடைந்தனர். 
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 
புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் புதிதாக 90,123 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,20,359-ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,290 பேர் தொற்றுக்கு உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 82,066-ஆக அதிகரித்தது.
ஒரே நாளில் 82,961 பேர் குணமடைந்தனர்: கரோனா தொற்றில் இருந்து செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 82,961 பேர் குணமடைந்தனர். இதில், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் இருந்து 59 சதவீதம் பேர் குணமடைந்தனர். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39,42,360-ஆக அதிகரித்தது. மொத்த பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 78.53 சதவீதமாகும்.
மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.63-ஆகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 9,95,933 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, மொத்த பாதிப்பில் 19.84 சதவீதமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தகவல்படி, செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 5,94,29,115 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 11,16,842 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 நாள்களில் மட்டும் புதிதாக 10 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரிக்க 21 நாள்களாகின.  20 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக அதிகரிக்க 16 நாள்களாகின. 30 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக அதிகரிக்க 13 நாள்களாகின. இந்த நிலையில், 40 லட்சத்தில் இருந்து 11 நாள்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

 

தமிழகத்தில்...

பாதிப்பு - 5,19,860

ADVERTISEMENT

பலி - 8,559

மீட்பு - 4,64,668

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT