இந்தியா

இந்தியாவில் முக்கிய பிரமுகர்களை உளவு பார்க்கும் சீன நிறுவனம்

17th Sep 2020 02:07 AM

ADVERTISEMENT

 

புது தில்லி:  இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் தனிப்பட்ட விவரங்களையும்,  அமைப்புகளையும் சீன தொழில்நுட்ப நிறுவனம் கண்காணித்து வருவதாக  பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள், அண்டை நாட்டின் டிஜிட்டல் தாக்குதலை சமாளிக்க அசைக்க முடியாத நெருப்புச்சுவரை கட்டி எழுப்ப வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டனர். 

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கே.சி. வேணுகோபால், ராஜீவ் சாதவ் ஆகியோர் பூஜ்ஜிய நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பியபோது, மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமாறு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். மேலும், "இது முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத் தெரிவித்து,

உண்மைத் தன்மையைக் கண்டறிவதுடன்,  இதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பாருங்கள் என அவர்அறிவுறுத்தினார். 

ADVERTISEMENT

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி கூறுகையில், கரோனா தீநுண்மி பரவுதல், லடாக்கில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல், தற்போது டிஜிட்டல் தாக்குதல்" ஆகியவற்றின் பின்னணியில் சீனா உள்ளது. 

நாம் அந்நாட்டின் பிடியில் இருக்கிறோம் என்பது குறித்து அரசு விழித்துக்கொள்ளவில்லையா?  நமது தேசிய பாதுகாப்பு சிதைக்கப்பட்டு வருகிறது என்றார். 

மேலும், சீனாவின் "புதிய அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கு அசைக்க முடியாத நெருப்புச்சுவர் ஒன்றை உருவாக்க வேண்டும் என தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை  கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸின் மற்றொரு எம்பியான சுரேஷ் கொடிக்குன்னிலும் மக்களவையில் இந்தப் பிரச்னையை எழுப்பினார். 

முன்னதாக, மாநிலங்களவையில் வேணுகோபால் பேசியது: அதிர்ச்சியூட்டும் இந்தச் செய்தி தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய குடிமக்களின் தனியுரிமை தொடர்பானது என்பதை  இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

ஷென்ùஸனை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த தொழில்நுட்ப நிறுவனம், சீன அரசுடனும், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொடர்புடையது. அந்நிறுவனம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களையும், அமைப்புகளையும் அதன் வெளிநாட்டு தரவு இலக்குகளின் மூலம் உலகளாவிய தரவு தளத்திலிருந்து கண்காணித்து வருவதாக ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

அதில், இந்திய குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர், மாநில முதல்வர்கள், எம்.பி.க்கள், ராணுவத் தளபதி,  தொழிலதிபர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் அடங்குவர் என்பது மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. 

மேலும், அந்த நிறுவனம் முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகள், நீதிபதிகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மதப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் புள்ளிவிவரங்களையும் சேகரித்துள்ளது.  

 மிகவும் கவலைக்குரிய இந்த விஷயத்தை அரசு கவனத்தில் எடுத்துள்ளதா? அப்படியானால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்பதை அறிய விரும்புகிறேன்.

எல்லைப் பகுதிகளில் சீன ஊடுருவல் தொடர்பான அறிக்கைகளுக்கு இந்த அரசு பதிலளிக்கவும் இல்லை, அதுகுறித்து விவாதிக்கவும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

வேணுகோபாலின் கருத்துகளை ஆமோதித்து சாதவ் பேசுகையில், இது மிகவும் தீவிரமான பிரச்னை.  "இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். 

இவ்விஷயத்தில் உண்மை வெளிவர வேண்டும். ஒரு சீன நிறுவனம் முக்கிய நபர்களை எவ்வாறு உளவு பார்க்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT