இந்தியா

ஊடகங்களை மௌனமாக்கும் ஆந்திர நீதிமன்ற உத்தரவு: உச்சநீதிமன்றத்தை அணுக மாநில அரசு முடிவு

17th Sep 2020 01:47 AM

ADVERTISEMENT


அமராவதி: ஆந்திரத்தில் முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞருக்கு எதிரான நில மோசடி வழக்கில் விசாரணை நடத்தவும், அந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை ஊடகங்கள் வெளியிட தடை விதித்தும் அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக ஆந்திர அரசு உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளது. 

ஆந்திர மாநிலம் அமராவதி நகரில் நடைபெற்ற நிலமோசடி தொடர்பாக அந்த மாநில முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர் தம்மலப்பட்டி ஸ்ரீநிவாஸ் உள்பட 13 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிராக மாநில உயர்நீதிமன்றத்தில் தம்மலப்பட்டி ஸ்ரீநிவாஸ் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் நில மோசடி தொடர்பாக விசாரணை நடத்த இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும் அந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை ஊடகங்கள் வெளியிடவும் தடை விதித்தது. 

இந்த உத்தரவு தொடர்பாக மாநில அரசின் (பொது விவகாரங்கள்) ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா ரெட்டி கூறுகையில், "உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கில் சட்டப்பேரவை, நிர்வாகம், ஊடகம், விசாரணை அமைப்புகளின் வாயை அடைக்க முயற்சிப்பது மோசமானது. அப்பாவி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டாலோ, நலிந்த பிரிவினர் ஒடுக்கப்பட்டாலோ அதுகுறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பினால் அதை புரிந்துகொள்ளலாம். ஆனால் ஊடகங்களை எப்படி மௌனமாக்கலாம். இதற்கு எதிராக நிச்சயம் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்' என்று தெரிவித்தார். 

ஆந்திர உயர்நீதிமன்றம் ஊடகங்களுக்கு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக நாடாளுமன்றத்திலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரச்னை எழுப்பினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT