இந்தியா

வெங்காய ஏற்றுமதி தடையால் பாகிஸ்தானுக்கு லாபம்: சரத் பவார்

15th Sep 2020 05:01 PM

ADVERTISEMENT


வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று (செவ்வாய்க்கிழமை) வலியுறுத்தினார்.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்த சரத் பவார் இந்த கோரிக்கையை வைத்துள்ளார். 

இதுபற்றி பியூஷ் கோயலிடம் சரத் பவார் தெரிவித்ததாவது:

"இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு சர்வதேச அளவில் நல்ல தேவை இருக்கிறது. நாம் (இந்தியா) தொடர்ச்சியாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வருகிறோம். ஆனால், மத்திய அரசின் இந்த திடீர் முடிவால், சர்வதேச சந்தையில் வெங்காய ஏற்றுமதியில் இந்தியா மீது உள்ள நம்பகத்தன்மை பாதிக்கப்படும். இது பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு உதவும் வகையில் அமையும்."

ADVERTISEMENT

இதன்பிறகு, சுட்டுரைப் பக்கத்தில் சரத் பவார் பதிவிட்டதாவது:

"மத்திய வர்த்தகத் துறை, நிதித் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சகங்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, தடை குறித்து மறுபரிசீலனை செய்வதாக பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார். சந்தையில் வெங்காய விலை அதிகரித்து வருவதால், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சகம்தான் முன்மொழிந்ததாக அவர் தெரிவித்தார்."

முன்னதாக:

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஏப்ரல்-ஜூலை வரையிலான காலத்தில் வெங்காய ஏற்றுமதி 30 சதவீதம் உயர்ந்தது. இதனால் நாட்டில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதி இந்தத் தடை விதிக்கப்பட்டது.

Tags : Sharad Pawar
ADVERTISEMENT
ADVERTISEMENT