இந்தியா

புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல்

14th Sep 2020 07:25 PM

ADVERTISEMENT

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திங்கள்கிழமை அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடியை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம் (48). இவர் சனிக்கிழமை  வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற போது முன் விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

கொலை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி இவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள், முதுகுடி அருகே சங்கரன் கோயில் வழியான சாலை போக்குவரத்தை முடக்கி மூன்றாவது நாளாக போராடி வருகின்றனர். எனவே தற்போது வரை வேறு வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. தற்போது வரை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராஜாலிங்கம் சடலத்தை வாங்கவும் உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முதுகுடியை சேர்ந்த சந்திரசேகர், ராஜன், மாரிச்செல்வம், பாலமுருகன் ஆகிய நான்கு நபர்களை தெற்கு காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் மீதமுள்ள அனைவரையும் கைது செய்யக் கோரி இன்று 10 மணிக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் காந்தி சிலை அருகே மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல் துறை கண்காணிப்பாளர்கள் பெருமாள் மற்றும் ராஜராஜன் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். 

திங்கள்கிழமை காலை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முனியராஜ், பாலமுருகன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று பேர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டதால் போராட்டத்தை கைவிடக் கோரி  போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தமிழகம் கட்சியினர் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காந்தி சிலை வரை ஊர்வலமாக வந்தனர்.

காந்தி சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் காவல் துறையை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதி அளித்ததன் பேரில் புதிய தமிழகம் கட்சியினர் கலைந்து சென்றனர்.

Tags : virudhunagar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT