இந்தியா

இளைஞரின் உடலை வேறொரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த மருத்துவமனை ஊழியர்கள்

14th Sep 2020 12:48 PM

ADVERTISEMENT


மும்பை: உடல் நலக் குறைவால் உயிரிழந்த இளைஞரின் உடலை வேறொரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த மருத்துவ ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனையின் போது அந்த நபரின் சிறுநீரகங்களை ஊழியர்கள் திருடிவிட்டதாகக் குற்றம்சாட்டி அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் குளறுபடிகள் அனைத்தும் லோகமான்யர் திலக் முனிசிபல் பொது மருத்துவமனையில் ஞாயிறன்று நடந்தது. இந்த சம்பவத்தில் பிணவறையில் பணியாற்றி வந்த இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியான அங்குஷ் சர்வாடே (28)வின் உடலை, தற்கொலை செய்து உயிரிழந்த ஹேமந்த் திகம்பரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்ததே சிக்கல்களுக்குக் காரணம்.

ADVERTISEMENT

இந்தத் தகவல் தெரிய வந்ததை அடுத்து, சர்வாடேவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த சர்வாடேவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார்.  அதே நாளில் திகம்பர், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இரண்டு உடல்களுக்கும் ஞாயிறன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

சர்வாடேவின் குடும்பத்தினர் மாலை 4 மணிக்கு வந்து உடலைப் பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். இதற்கிடையே, திகம்பரின் குடும்பத்தினர் சர்வாடேவின் உடலை அடையாளம் காட்டி காவல்துறை கையெழுத்துடன் உடலைப் பெற்றுச் சென்றுவிட்டனர். அதோடு, திகம்பரின் குடும்பத்தினர் சர்வாடேவின் உடலுக்கு இறுதிச் சடங்குகளையும் செய்துவிட்டனர்.

மாலையில் உடலைப் பெற்றுச் செல்ல வந்த சர்வாடேவின் குடும்பத்தினர், இது பற்றி அறிந்ததும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 

Tags : hot news
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT