இந்தியா

ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் பணம் மோசடி: பணப்பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கு முடக்கம்

11th Sep 2020 12:02 PM

ADVERTISEMENT

 

அயோத்தியில் ராமர் கோவில் பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி  அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டு குழுக்கள் லக்னௌ மற்றும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ராம் ஜென்மபூமி அறக்கட்டளையில் இருந்து திருடப்பட்ட ரூ.6 லட்சத்தில் 4 லட்ச ரூபாயை திருடர்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துவிட்டனர். தற்போது அந்த வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் மட்டுமே உள்ளது.

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்த அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து அடையாளம் தெரியாத நபர்களால் ரூ.6 லட்சம் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்னௌவில் உள்ள இரண்டு வங்கிகளில் காசோலை மூலமாக பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 1ஆம் தேதி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சமும் இரண்டு நாள்களுக்குப் பிறகு ரூ.3.5 லட்சமும் எடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.9.86 லட்சத்தை எடுக்க முயன்றபோது வங்கித் தரப்பில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய்-க்கு தகவல் அளித்ததன் பேரில் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பாக அயோத்தி கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கை விசாரிக்க இணைய நிபுணர்கள் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

Tags : ram temple
ADVERTISEMENT
ADVERTISEMENT