இந்தியா

பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? - சோனியாவுக்கு கங்கனா ரணாவத் கேள்வி

11th Sep 2020 03:38 PM

ADVERTISEMENT


மும்பை: மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனை தனக்கு இழைக்கும் துன்பங்களை கண்டுகொள்ளாமல் அமைதி காப்பதும், அலட்சியமாக இருப்பதும் சரியல்ல என்றும் அவ்வாறு காங்கிரஸ் தலைமை இருந்தால் வரலாறு தீர்ப்பளிக்கும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரம் தலைநகர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த விவகாரத்தால், நடிகை கங்கனா ரணாவத்துக்கும் சிவசேனை கட்சிக்கும் இடையேயான வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது. 

இதனிடையே, மும்பையில் கங்கனாவுக்குச் சொந்தமான வீட்டின் ஒரு பகுதி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய மாநகராட்சி நிர்வாகம், அதை இடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை விசாரணை மேற்கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், நடிகை கங்கனாவின் வீட்டை இடிப்பதற்குத் தடை விதித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கங்கனா ரணவாத் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் சுட்டுரை பதிவில் கூறியிருப்பதாவது: "அன்புள்ள மரியாதைக்குரிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அவர்களே, மகாராஷ்டிரத்தில் உங்கள் கூட்டணி அரசு, என்னை நடத்தும் விவகாரம், பெண்ணாக  உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா?

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பின் கொள்கைகளை நிலைநிறுத்துமாறு உங்கள் கூட்டணி அரசிடம் அறிவுறுத்த முடியவில்லையா? " 

"பெண்  எதிர்கொள்ளும் போராட்டங்களை நீங்கள் அறிந்திருக்க கூடும். சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி ஒரு பெண்ணை உங்கள் கூட்டணி அரசு துன்புறுத்தும் நிலையில், உங்களின் அமைதியையும் அலட்சியத்தையும் வரலாறு தீர்மானிக்கும். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

"நீங்கள் மேலை நாட்டில் வளர்ந்து  இந்தியாவில் வாழ்கிறீர்கள். பெண்களின் போராட்ட துயரங்கள் நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்கள் கூட்டணி அரசு என்னைப் போன்ற பெண்களை துன்புறுத்தும் போது, உங்களின் அமைதியையும், அலட்சியத்தையும் பற்றி வரலாறு தீர்மானிக்கும். ​​சட்டம் ஒழுங்கை கூட்டணி அரசு ஒட்டுமொத்தமாக கேலிக்கூத்தாக்கி வருகிறது. நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அடுத்தடுத்த சுட்டுரையில் கூறியுள்ளார். 

முன்னதாக, நடிகா் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக கங்கனா ரணாவத் சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா். மேலும், ஹிந்தி திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பது குறித்தும், மும்பை போலீஸாா் குறித்தும் கங்கனா தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இதற்கு மகாராஷ்டிரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து எதிா்ப்பு கிளம்பியது. மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று கூறியுள்ளதால் இனி கங்கனா மும்பைக்கு வரக் கூடாது என்று சிவசேனை கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் சஞ்சய் ரௌத் எழுதினாா். இதற்கு பதிலடி கொடுத்த கங்கனா, ‘மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்’ என்று சவால் விடுத்தாா்.

இதையடுத்து, கங்கனா மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சஞ்சய் ரௌத் வலியுறுத்தினாா்.

இதனைத் தொடர்ந்து ங்கனா ரணாவத்துக்கு துப்பாக்கியுடன் கூடிய 10 சிஆா்பிஎஃப் கமாண்டோ வீரா்கள், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள கங்கனா, ‘நமது நாட்டில் தேசபக்தி உள்ளவா்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பது தெளிவாகியுள்ளது. எனக்கு பாதுகாப்பு அளித்ததற்காக உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். 

இத்தகைய பாதுகாப்பைப் பெறும் முதல் பாலிவுட் பிரபலம் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : kangana ranaut
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT