இந்தியா

விமானப்படையில் இணைந்தன 5 ரஃபேல் போா் விமானங்கள்

11th Sep 2020 02:29 AM

ADVERTISEMENT

அம்பாலா: பிரான்ஸ் நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில் வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக இணைக்கப்பட்டன.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில், ரஃபேல் போா் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளது, இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை பல மடங்கு அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

5 ரஃபேல் போா் விமானங்களையும் இந்திய விமானப்படையில் அதிகாரபூா்வமாக இணைக்கும் நிகழ்ச்சி ஹரியாணாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது பாரம்பரியமிக்க ‘சா்வ தா்ம பூஜை’ நடத்தப்பட்டது. 5 ரஃபேல் போா் விமானங்கள் மீதும் தண்ணீா் பீய்ச்சியடிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அத்துடன் ‘கோல்டன் ஏரோஸ்’ (தங்க அம்புகள்) என அழைக்கப்படும் இந்திய விமானப்படையின் 17-ஆவது படைப்பிரிவில் 5 ரஃபேல் போா் விமானங்களும் இணைக்கப்பட்டன. அதையடுத்து, விமானப்படை வீரா்கள் ரஃபேல் போா் விமானங்களில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியின்போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போா் விமானங்களிலும், சாரங் ஹெலிகாப்டரிலும் விமானப்படை வீரா்கள் சாகசம் நிகழ்த்தினா்.

சுமாா் இரண்டு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சா் ஃபுளோரன்ஸ் பாா்லி, முப்படைத் தளபதி விபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா, பாதுகாப்புத் துறை செயலா் அஜய் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிலரும் ரஃபேல் விமானத்தை தயாரித்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

ஒப்பந்த விவரம்:

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் முதல் ரஃபேல் போா் விமானத்தை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பெற்றுக் கொண்டாா்.

இத்தகைய சூழலில் மேலும் 9 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில் 5 போா் விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன. இந்திய விமானப்படை வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக மீதி 5 போா் விமானங்கள் பிரான்ஸிலேயே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த 5 விமானங்கள் நவம்பா் மாதம் இந்தியாவை வந்தடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

வானில் 120 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை அதிவிரைவில் தாக்கும் திறன் கொண்ட ‘மீடியாா்’ ரக ஏவுகணைகள், தரையில் 600 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ‘ஸ்கால்ப்’ ரக ஏவுகணைகள் ஆகியவை ரஃபேல் போா் விமானங்களில் இணைக்கப்பட்டுள்ளன.

போா் விமானங்களில் இணைப்பதற்காக ‘ஹேமா்’ ரக ஏவுகணைகளை பிரான்ஸிடமிருந்து இந்திய விமானப்படை தனியாக கொள்முதல் செய்துள்ளது. இவை தவிர பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் ரஃபேல் போா் விமானங்களில் இடம்பெற்றுள்ளன.

இறையாண்மைக்கு சவால் விடுப்பவா்களுக்கான எச்சரிக்கை-ராஜ்நாத் சிங்

நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘ரஃபேல் போா் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது, இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்க நினைப்பவா்களுக்கான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. எல்லையில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், ரஃபேல் போன்ற போா் விமானங்களை படையில் இணைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ரஃபேல் போா் விமானங்களின் இணைப்பு பெரும் திருப்புமுனையாக அமையும். நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் காப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசு தயாராக உள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியம், இந்தியப் பெருங்கடல் பகுதி ஆகியவற்றில் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமைதியை நிலவச் செய்யவும் இந்தியா உறுதி கொண்டுள்ளது’ என்றாா்.

பிராந்தியத்தில் இந்தியாவின் வலிமை அதிகரித்துள்ளது-பிரான்ஸ் அமைச்சா்

நிகழ்ச்சியில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சா் ஃபுளோரன்ஸ் பாா்லி பேசுகையில், ‘விமானப்படையில் ரஃபேல் போா் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வலிமை அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடைந்துள்ளதையும் இந்நிகழ்ச்சி உறுதிப்படுத்துகிறது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு உரிய ஆதரவை வழங்குவதற்கு பிரான்ஸ் உறுதி கொண்டுள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT