இந்தியா

போதைப்பொருள் விவகாரத்தில் கைது: நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை

10th Sep 2020 02:36 AM

ADVERTISEMENT


பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்ததை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 
கன்னடத் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதாக திரைப்பட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்த குற்றச்சாட்டையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை (செப். 4) நடிகை ராகினி துவிவேதியின் வீட்டை சோதனை செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 
இந்த நிலையில், போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை சஞ்சனாவை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதையடுத்து, அவரிடமும், நடிகை ராகினி துவிவேதியிடமும் குற்றப்பிரிவு ஆய்வாளர் அஞ்சுமாலா தலைமையில் போலீஸார் புதன்கிழமை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.  
நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா குடும்பத்தினர், அவர்களுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். அதற்கு பதில் மனுவை தாக்கல் செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் விவகாரத்தில் திரைப்படத் துறையினரையும் மட்டும் குற்றம்சாட்டாமல், அதை பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அதன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நடிகர் யஷ்தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT